நான்கு வருடங்களுக்கு முன்னர் எகிப்து சிறைப்படுத்திய அல் ஜஸீரா பத்திரிகையாளர் விடுதலை செய்யப்பட்டார்.
2016 இல் பொய்ச் செய்தியை வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டி அல் ஜஸீரா ஊடகத்தின் பத்திரிகையாளர் மஹ்மூத் ஹூசேன் எகிப்தினால் விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டார். அதன் பின்பு அவர் மீது எந்த வழக்கும் போடாமல் “முற்பாதுகாப்புக் கைது” என்ற பெயரில் உள்ளேயே வைத்திருந்தது எகிப்திய அரசு.
எகிப்திய குடிமகனான மஹ்மூத் ஹூசேனை வெளியே விடும்படி நாலு வருடங்களாகவே அல் ஜஸீரா ஊடகம் தினசரி தனது வெளியீடுகளில் கோரி வந்திருக்கிறது. அவர் விடுதலை செய்யப்பட்டதை எகிப்தின் மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டிருக்கிறது. ஆனால், அல் ஜஸீராவுக்கு அது பற்றி இன்னும் ஏதும் விபரங்கள் தெரியாதென்றும், அவர் இன்னும் தனது வீட்டுக்குத் திரும்பவில்லையென்றும் குறிப்பிடப்படுகிறது.
மஹ்மூத் ஹூசேன் கத்தாருக்கும், சவூதி அரேபியா அதன் சகாக்களுக்கு இடையே ஏற்பட்ட அரசியல் கருத்துவேறுபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட பகடைக்காயாகும். எகிப்தில் ஆட்சியைக் கைப்பற்றிய இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கத்திற்கு கத்தார் ஆதரவு கொடுத்ததாகச் சவூதி அரேபியா, எமிரேட்ஸ், பஹ்ரேன், எகிப்து ஆகிய நாடுகள் குற்றஞ்சாட்டி வந்திருந்தன.
இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமென்றும் அவர்களுடன் கத்தார் தனது தொடர்புகளைத் துண்டித்துக்கொள்ளவேண்டும் என்பதும் 2017 இல் சவூதியும் அதன் கூட்டாளிகளும் கத்தாரைப் பகிஷ்கரித்துத் தண்டித்து வந்ததற்கு ஒரு காரணமாகும்.
மஹ்மூத் ஹூசேனைத் தவிர கத்தார் மேலும் இரண்டு அல் ஜஸீரா பத்திரிகையாளர்களைக் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தது. அவர்களிலொருவர் ஆஸ்ரேலியர், மற்றவர் கனடிய – எகிப்தியர். அவர்களை பின்னர் எகிப்திய ஜனாதிபதி ஸிஸி மன்னித்து விடுதலை செய்து நாட்டை விட்டு வெளியேற்றியிருந்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்