நடக்கவிருந்த ஜனாதிபதித் தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட சோமாலியாவில் குண்டுவெடிப்பில் பாதுகாப்புப் படையினர் 12 பேர் இறந்தனர்.
இன்று திங்களன்று சோமாலியாவில் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நடக்கவிருந்தது. ஆனால், நாட்டின் வெவ்வேறு பிராந்தியங்களுக்குள்ளும் பிரதிநிதிகளை எப்படித் தெரிவுசெய்வது என்பதில் ஏற்பட்ட உள்பிரச்சினைகளால் தேர்தல் தள்ளிப்போடப்பட்டிருக்கிறது.
அதையடுத்து ஞாயிறன்று இரவு துசமாரப் நகரப் பகுதியில் எல்லைக்காவலில் வெடித்த குண்டொன்று 12 பாதுகாப்புப் படையினரைக் கொன்றிருக்கிறது. சோமாலியாவில் பலமடைந்துவரும் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பான அல் ஷபாப் குண்டுவெடிப்புக்குப் பொறுப்பேற்றிருக்கிறது.
ஜனாதிபதித் தேர்தலின் அதிகாரப் பிரிப்பில் ஏற்பட்டிருக்கும் இழுபறிகளைப் பற்றிப் பேசித் தீர்க்க துசமாரப் நகரில் அரசியல்வாதிகள் கூடிப் பேசத் திட்டமிட்டிருந்தார்கள்.
நீண்ட காலமாக உள்நாட்டுப் போரில் அழிந்துகொண்டிருந்த சோமாலியாவில் 2010 அளவில்தான் ஓரளவு அமைதி ஏற்பட்டது. அதையடுத்து நாட்டில் ஒரு ஜனநாயக அதிகார அமைப்பைக் கட்டியெழுப்புவதற்காகச் சர்வதேச உதவியுடன் 2012 இல் ஒரு முதல்கட்ட அரசாங்கம் அமைக்கப்பட்டது. ஒரு பங்கு ஜனநாயகப் பிரதிநிதித்துவமும் பெரும்பங்கு நாட்டின் பலமான அதிகார குடும்பங்களின் பங்கெடுப்பிலுமாக அதன்மூலம் அரசு உருவாகப்பட்டது. நாலு வருடங்களுக்கொருமுறை ஆங்காங்கே தேர்தல்களும், மறைமுகப் பிரதிநிதித்துவமும் பாவிக்கப்பட்டு ஓரளவு சமரசம் உண்டாகி வந்தது.
அந்த ஏற்பாட்டில் தற்போது பிளவு ஏற்பட்டிருக்கிறது. சில பிராந்தியங்களின் தலைமைகள் ஜனாதிபதிப் பதவியைத் தேர்ந்தெடுக்கும் அமைப்பில் தமது குரலுக்குப் போதிய அளவு இடம் கிடைக்கவில்லையென்று எதிர்ப்புக் கொடியைத் தூக்கியிருப்பதாலேயே புதிய தேர்தலைத் தள்ளிப்போடவேண்டியதாயிற்று. இந்த நிலைமையை விரைவில் பேசித் தீர்க்காவிடின் சோமாலியா மீண்டும் ஆழமான பிளவில் போர்ப்பிராந்தியமாகிவிடுமென்று எச்சரிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்