பாலஸ்தீனத்துடனான காஸா எல்லையை நிரந்தரமாகத் திறக்கப்போவதாக அறிவிக்கிறது எகிப்து.
பாலஸ்தீனர்களின் பிளவுபட்ட இயக்கங்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்தப் பேச்சுவார்த்தைகளை நடாத்திவருகிறது எகிப்து. இரண்டு மில்லியன் மக்கள் வாழும் காஸாவுக்கு நிலப் பிரதேசத்தால் வெளி உலகுடனான தொடர்பை ரபா [Rafah border] எல்லை மட்டுமே கொடுக்கிறது. அதை எப்போதாவது ஒரு முறை 3 – 4 நாட்களுக்குத் திறந்து வைப்பதே எகிப்தின் வழக்கம்.
பாலஸ்தீன நிலப்பரப்பிலேயே மிகவும் மோசமான ஏழ்மையில் வாழும் பிராந்தியம் காஸா. அதன் ஒரே ஒரு எல்லை இஸ்ராயேலின் கட்டுப்பாட்டிலில்லை, எகிப்தின் கையிலிருக்கிறது. இஸ்ராயேலுடன் நல்லுறவிலிருக்கும் எகிப்து அந்த எல்லையினூடாக பாலஸ்தீனர்கள் ஆயுதங்களைக் கடத்திச் சென்று இஸ்ராயேலைத் தாக்குவதால் அதைப் பெரும்பாலும் மூடியே வைத்திருப்பதுண்டு. கடந்த ஆறு மாதங்களாக அது திறக்கப்படவில்லை.
காஸாவில் 2006 இல் நடாத்தப்பட்ட தேர்தலில் எதிர்பாராதவிதமாக ஹமாஸ் என்ற இஸ்லாமியத் தீவிரவாத இயக்கம் வெற்றிபெற்றது. இஸ்ராயேலை அழிப்பதாகச் சூழுரைத்திருக்கும் அவ்வியக்கத்தினர் பாலஸ்தீனத்தின் மிச்சப் பகுதிகளை ஆளும் அல்- பத்தா இயக்கத்தினரையும் தமது எதிரிகளாகவே பார்க்கிறார்கள்.
பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டுமானால், இந்த இரண்டு பாலஸ்தீனப் பாகத்தினரும் ஒன்றுபடவேண்டும் என்பது சர்வதேச ரீதியில் ஒரு கட்டாயக் கோரிக்கையாகக் குறிப்பிடப்பட்டு வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்