சரித்திரத்தில் முதல் தடவையாக வத்திக்கானில் பாலியல் வன்புணர்வு வழக்கொன்று நடக்கிறது.
2007 – 2012 காலத்தில் வத்திக்கானில் தேவாலய உதவும் 13 வயதுப் பையனொருவனைப் பாலியல் வன்புணர்வு செய்ததாக இரண்டு வத்திக்கான் பாதிரியார்கள் மீது வழக்கு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. வத்திக்கானில் இந்தக் குற்றத்துக்காக வழக்கு நடப்பது இதுவே முதல் தடவையாகும்.
இருவரில் 28 வயதான பாதிரியார் பையனைத் தனது இச்சைக்குட்படுத்தியதாகவும், 72 வயதான பாதிரியார் அக்குற்றம் வெளிவராமல் மறைத்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்கள். குற்றத்தை அப்பையனின் அறையிலிருந்த நண்பன் தான் 2017 இல் பத்திரிகையாளர்களுக்கு வெளிப்படுத்தினான். ஆனால், 2012 லேயே அதுபற்றித் தெரிந்திருந்தது. 28 வயதுப் பாதிரியாரின் இச்செய்கைகளை அறிந்திருந்தும் வயதானவர் அவரைப் பாதிரியாராக்கியிருக்கிறார். வத்திக்கானிலிருக்கும் Pius X-பாதிரியார் கல்விக்கூடத்தில் இது நடந்திருக்கிறது.
இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் கத்தோலிக்கத் தேவாலயத்தினுள் நீண்ட காலமாகவே இருந்தன. ஆனால், பல மேற்றிராணியார்கள் அவைகள் வெளியே வராமல் மூடிமறைத்து வந்தார்கள். பாப்பரசர் பிரான்ஸில் இதுபற்றிக் குறிப்பிட்டு அப்படியான பாதிரியார்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதாகக் கூறியிருப்பினும் மெத்தனமாகவே இருப்பதாகவும், மூடி மறைத்த பல மேற்றாணிமாரை விட்டுவைத்திருப்பதாகவும் அவர் மீது விமர்சனங்கள் உண்டு. பாலியல் குற்றச்சாட்டுக்கள் தேவாலயங்களில் எழும்போது அவைகளைக் கட்டாயமாக அவ்வப்பகுதிக் காவலர்களிடம் முறையீடு செய்யவேண்டுமென்று பாப்பரசர் குறிப்பிட்டிருப்பினும் தொடர்ந்தும் இவை பெரும்பாலும் மூடி மறைக்கப்பட்டே வருகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்