காலநிலை மாற்றங்களுக்கெதிரான நடவடிக்கைகளிலொன்றாக பாரிஸ் விமான நிலைய விஸ்தரிப்புத் திட்டம் கைவிடப்பட்டது.
பிரான்ஸின் மிகப்பெரிய விமான நிலையமான பாரிஸ் சார்ல்ஸ் டி கோல் விஸ்தரிப்புத் திட்டத்தைக் கைவிடுவதாக நாட்டின் சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு அமைச்சர் பார்பரா பொம்பிலி அறிவித்திருக்கிறார். திட்டமிட்டிருக்கும் விமான நிலைய விஸ்தரிப்பை அதே முறையில் தொடர்வது பிரான்ஸின் காலநிலை மாற்றத்துக்கெதிரான போராட்டத்துக்கு ஒவ்வாது என்று அவர் குறிப்பிட்டார்.
2037 ம் ஆண்டில் சார்ல்ஸ் டி கோல் விமான நிலையம் தற்போது இருப்பதை விட வருடத்துக்கு 40 மில்லியன் அதிக பிரயாணிகளைக் கையாளக்கூடியதாக மாற்றப்படவேண்டுமென்பது திட்டமாக இருந்தது. தான் விமான நிலைய நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு தற்போது இருக்கும் அளவைக் கொண்டே சுற்றுப்புற சூழலைப் பாதிக்காத வகையில் அதிக பலனைத் தரக்கூடிய திட்டத்தை முன்வைக்குமாறு கேட்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே மேசையிலிருக்கும் திட்டம் சுமார் 10 மில்லியன் செலவில் அதிக விஸ்தரிப்பைக் குறியாகக் கொண்டதாகும். அப்படியொரு குறி பிரென்ச் அரசின் சுற்றுப்புற சூழல் பேணலுக்கான கோட்பாடுடன் ஒவ்வாது என்பதைத் தெளிவுபடுத்துவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். ஏற்கனவே அதே திட்டம் நாட்டில் பல கோணங்களிலும் எதிர்ப்பைச் சம்பாதித்திருக்கிறது.
கொவிட் 19 கட்டுப்பாடுகளால் ஏற்கனவே படுமோசமாக வீழ்ச்சியடைந்திருக்கும் விமானப் போக்குவரத்தும், பிரயாணங்களின் அளவும் அரசாங்கத்தை வித்தியாசமாகச் சிந்திக்கவைத்திருக்கிறது. “எமக்கு விமானப் போக்குவரத்து எதிர்காலத்திலும் அவசியம். ஆனால், நாம் அதைக் கெட்டிக்காரத்தனமாகப் பாவிக்கும் வழிகளைக் கற்றுக்கொள்ளவேண்டும்,” என்கிறார் அமைச்சர்.
சாள்ஸ் ஜெ. போமன்