கடற்கொள்ளையர்களிடம் அகப்பட்டிருந்த துருக்கிய மாலுமிகள் விரைவில் நாடு திரும்புவார்கள்.
கடந்த மாதம் நைஜீரியாவுக்கு வெளியே கினியா குடாவில் வைத்துக் கடற்கொள்ளைக்காரர்களால் கைப்பற்றப்பட்ட துருக்கிய மாலுமிகள் விடுவிக்கப்பட்டார்கள் என்று துருக்கி தெரிவிக்கிறது. கடற்கொள்ளையர்கள் தாக்கியபோது கொல்லப்பட்ட ஒரு ஆஸார்பைஜானியைத் தவிர 15 துருக்கிய மாலுமியர்களும் நலமாக இருக்கிறார்கள்.
உலகில் கடற்கொள்ளைக்காரர்களின் தாக்குதல்கள் அதிகமாக இருக்கும் கினியாக் குடாவில் The Mozart ஜனவரி 23ம் தேதியன்று கைப்பற்றப்பட்டது. மாலுமிகளையும், கப்பல்களையும் கைப்பற்றி வைத்துக் கப்பல் நிறுவனங்களிடம் கப்பம் கேட்கும் கடற்கொள்ளைக்காரர்கள் அதிகமாக இருக்கும் பகுதி அது என்று கடந்த சில வாரங்களாகவே எச்சரிக்கப்படுகிறது.
கேப் டவுனிலிருந்து லாகோசுக்குப் போய்க்கொண்டிருந்த அந்தக் கப்பல் லைபீரியா நாட்டின் கொடியைக் கொண்டிருந்தது. கைப்பற்றிய இரண்டு வாரங்களின் பின்னர் கடற்கொள்ளைக்காரர்கள் கப்பத் தொகை கேட்டுத் தொடர்பு கொண்டிருந்தார்கள். அவர்களுடன் பேரம் பேசுவதற்காக ஒர் ஆங்கிலேய நிறுவனம் நியமிக்கப்பட்டிருந்தது. கடத்தலுக்குப் பின்னணியில் அரசியல் காரணம் ஏதுமில்லை என்று குறிப்பிட்ட துருக்கிய வெளிவிவகார அமைச்சர் பணயத் தொகை கொடுக்கப்பட்டதா போன்ற விபரங்களை வெளியிடவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்