நைஜீரியாவில் மீண்டும் பாடசாலை மாணவர்கள் கடத்தப்பட்டார்கள். இம்முறை 70 க்கும் அதிகமானோர்.

பாடசாலைப் பிள்ளைகளைக் கடத்தில் செல்வதும், பின்னர் அவர்களை மீட்க பணயத் தொகைகள் கொடுக்கப்படுவதும் நைஜீரியாவில் வழமையாகிவிட்டது. ஆகஸ்ட் 27 ம் திகதியன்று தான் ஏற்கனவே கடத்திச் செல்லப்பட்ட மூன்று பாடசாலைப் பிள்ளைக் குழுவினர் விடுவிக்கப்பட்டார்கள். அதையடுத்தே புதனன்று ஸம்பாரா மாநிலத்தில் 70 க்கும் அதிகமான நடுத்தர வகுப்பைச் சேர்ந்த பிள்ளைகள் கடத்திச் செல்லப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது.

கடத்தப்பட்டவர்களைக் காப்பாற்றும் முயற்சிகள் ஆரம்பித்திருப்பதாக மாநிலத்தின் பொலீஸ் அதிகாரத்தின் பேச்சாளர் முஹம்மது ஷேகு தெரிவித்தார். டிசம்பர் மாதத்திலிருந்து இதுவரை 1,000 க்கும் அதிகமான மாணவர்கள் நைஜீரியாவில் கடத்தப்பட்டிருக்கிறார்கள். அந்த மாணவர்களை விடுவிக்கப் பெரும் தொகைகள் பணயமாகக் கேட்கப்படுகின்றன. பெரும்பாலானவர்கள் பணயத்தொகை கொடுத்தவுடன் விடுவிக்கப்பட்டாலும் ஒரு பகுதி மாணவர்கள் இறந்தும், கொல்லவும் பட்டிருக்கிறார்கள்.

கடந்த வாரம் விடுவிக்கப்பட்ட 90 மாணவர்களே நைஜீரியாவில் கடத்திச் செல்லப்பட்ட ஆகக்குறைந்த வயதுக் குழுவினராகும். அப்பிள்ளைகளில் வயது குறைந்தவர்கள் 4 வயதானவர்களாகும். அவர்கள் அடர்ந்த காடுகளில் சுமார் மூன்று மாதங்கள் வைக்கப்பட்டிருந்தார்கள். பெற்றோர் தமது சொத்துக்கள் பெரும்பாலானவற்றை விற்றும், கிராம அமைப்பினர் தமது பள்ளிவாசல் நிலத்தின் பகுதியை விற்றுமே அந்தப் பிள்ளைகளை விடுவிக்கும் பணயத்தைச் செலுத்தியதாகப் பாடசாலை ஆசிரியர்கள் தெரிவிக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *