பசுபிக் சமுத்திரத்திலிருக்கும் தனது பழைய விமானத் தளங்களை தூசு தட்டி மீண்டும் பாவிக்க ஆரம்பிக்கிறது அமெரிக்கா.
சீனாவைச் சுற்றியிருக்கும் பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நிலை தளம்பும் நிலையால் அமெரிக்கா தனது போர்த் திட்டங்களை மாற்றிக்கொண்டிருக்கிறது. தனது அதி நவீன F 35 போர் விமானங்களையெல்லாம் குவாமில் கட்டப்பட்ட நவீன விமானத்தளத்தில் வைத்திருந்த அமெரிக்கா தற்போது அவைகளை வெவ்வேறு சிறிய விமானத் தளங்களுக்கு மாற்றிக்கொண்டிருக்கிறது.
பசுபிக் பிராந்தியத்தில் பல விமானத் தளங்களை வைத்திருப்பதைவிட ஒரேயிடத்தில் நவீன தரங்களுடன் ஒரேயொரு போர் விமானத் தளத்தை வைத்திருப்பதால் செலவுகளைக் குறைக்கலாம் என்ற எண்ணத்தில் செயற்பட்டு வந்தது அமெரிக்கா. ஆனால், சீனாவின் இராணுவ பலத்தையும், வியாபிக்கும் ஆர்வத்தையும் எதிர் நோக்கவேண்டியிருக்கிறது. ஒரேயிடத்தில் சகல போர்விமானங்களையும் சேர்ப்பதால் அவற்றை ஒரேயடியில் தாக்கியொழிக்க சீனாவுக்கு வசதியாக இருக்குமென்பதால் அப்பிராந்தியத்திலிருக்கும் தனது பழைய விமானத் தளங்களையும் பாவனைக்கு மீண்டும் கொண்டுவருகிறது அமெரிக்கா.
டொனால்ட் டிரம்ப்பைத் தொடர்ந்து ஜோ பைடன் அரசும் சீனாவுடன் வர்த்தக, அரசியல் விடயங்களில் நட்பாக இருக்கும் அறிகுறிகளில்லை. அத்துடன் சீனா தன்னைச் சுற்றியுள்ள நாடுகளில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் தனது கொடுக்குகளை நீட்டி வருகிறது. மீண்டும் சர்வதேச அரசியலில் முன்னரைப் போலவே ஈடுபடப்போவதாக அறிவித்திருக்கும் பைடனின் அரசுக்கு அதனால் அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கான பாதுகாப்பில் உதவுவது அவசியமாகிறது. அதனால், சீனா ஒரு இயல்பான எதிரியாகும் என்று கருதப்படுகிறது.
கேப் நோர்த் என்ற போர் விமானப் பயிற்சியில் தற்போது தனது நட்பு நாடுகளுடன் சேர்ந்து ஈடுபட்டு வருகிறது அமெரிக்கா. பசுபிக் பிராந்தியத்தில் நடந்துவரும் அப்பயிற்சிகளில் நவீனப் போர்விமானத் தளமான குவாம் மட்டுமன்றிப் பக்கத்துத் தீவுகளிருக்கும் சிறிய, பழைய கால விமானத் தளங்களையும் பயன்படுத்தி வருகிறார்கள். சிதிலமடைந்திருக்கும் நீண்ட காலம் பாவிக்கப்படாத விமானத் தளங்களைப் பரிசீலித்து அவைகளைத் தேவைக்கேற்றபடி புதுப்பித்துத் தனது போர்விமானங்களையும் இராணுவத்தையும் வெவ்வேறு அளவில் வெவ்வேறு தளங்களில் நிறுத்திவைக்கவிருக்கிறது அமெரிக்கா.
சாள்ஸ் ஜெ. போமன்