ஆஸ்ரேலியப் பாராளுமன்றத்தினுள் நடந்ததாகக் குறிப்பிடப்படும் மூன்றாவது வன்புணர்வுச் சம்பவம்.
ஒவ்வொன்றாக வெளியாகிவரும் ஆஸ்ரேலிய ஆளும் கட்சி உறுப்பினர்களின் கேவலமான நடத்தைகளின் விபரங்கள் நாட்டில் முக்கிய பேசுபொருளாகியிருக்கிறது. சமீப வாரங்களில் நாட்டின் பாராளுமன்றக் கட்டடத்துக்குள் நடந்ததாக மூன்று வன்புணர்வுச் சம்பவங்களில் விபரங்கள் வெளிவந்திருக்கின்றன.
பிரதமர் ஸ்கொட் மொரிஸன் “நாட்டின் மற்றைய வேலைத்தளங்களில் எப்படியான கலாச்சாரம் இருக்கவேண்டுமென்று முன்மாதிரிகையாக நடக்கவேண்டிய பாராளுமன்றத்தில் இத்தகைய குற்றங்கள் நடந்திருப்பது சகிக்க முடியாதது. இதுபற்றி ஒரு விபரமான ஆராய்வு நடத்தப்பட்டுச் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள்,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஏற்கனவே 2019, 2020 இல் தாங்கள் பாராளுமன்றக் கட்டடத்துக்குள் வைத்துக் கற்பழிக்கப்பட்டதாக இரு பெண்கள் கடந்த வாரங்களில் வெளிப்படுத்தியிருந்தார்கள். மூன்றாவதாக மேலுமொரு பெண் பாராளுமன்ற ஊழியர் தான் லிபரல் கட்சி ஊழியரொருவரால் 2016 இல் அடுத்தடுத்து இரண்டு நாட்கள் கற்பழிக்கப்பட்டதாக நேற்றுப் பத்திரிகையில் பேட்டியளித்திருந்தார்.
அது மட்டுமன்றி பாராளுமன்றத்துக்குள் வைத்துக் கற்பழிக்கப்பட்டதாக முதலாவதாகக் குற்றஞ்சாட்டிய பெண் தான் அச்சமயத்தில் தனது மேலதிகாரியாக இருந்த தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் லிண்டா ரெய்னோட்ல்ட்ஸிடம் முறையிட்டதாகவும், அவர் அவ்விடயத்தை மூடி மறைக்கும்படி கேட்டுக்கொண்டதாகவும் சொல்லியிருக்கிறார்.
ஆஸ்ரேலியப் பாராளுமன்றத்தினுள் பிடிக்காதவர்களைத் தலையில் அடக்கி வைக்க வெவ்வேறு மோசமான வழிகளில் நடக்கும் கலாச்சாரம் இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்திருக்கின்றன. 2018 ல் அமைச்சராக இருந்த ஜூலியா பிஷப், ஜூலியா பாங்க்ஸ் ஆகியோர் இதுபற்றிப் பகிரங்கமாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்