உலகுக்கு மூடிவைக்கப்பட்டுத் தாக்கப்பட்டுவரும் திகிராயில் நடந்தவை மெதுவாக வெளியே கசிய ஆரம்பிக்கின்றன.
எதியோப்பியா நவம்பர் மாதம் தனது சுயாட்சி மாநிலங்களில் ஒன்றான திகிராய் மீது போர் பிரகடனம் செய்யப்பட்டு நூறு நாட்களுக்கு மேலாகிறது. தொடர்ந்தும் திகிராய் பிராந்தியத்தினுள் தொலைத்தொடர்புகளெல்லாம் நிறுத்தப்பட்டு, எவரும் அங்கிருந்து உள்ளேயோ வெளியேயோ நடமாடத் தடை போடப்பட்டிருக்கிறது. நீண்ட காலத்தின் பின்னர் இரகசியமாக ஏற்படுத்தப்பட்ட தொடர்புகள் மூலம் உள்ளே நடந்தது, நடப்பவை வெளியே வர ஆரம்பிக்கின்றன.
திகிராய் மாநிலத்தில் நடந்துவரும் போரை “நவீன காலத்தில் இருட்டிலேயே நடத்தப்பட்டுவரும் போர்,” என்று குறிப்பிடுகிறார்கள். காரணம் அங்கே நடப்பவைகளின் விபரங்கள் திட்டமிட்டு முழுசாக மறைக்கப்பட்டு வருவதாகும். இரகசியமாகக் கசிந்து வர ஆரம்பித்திருக்கும் விடயங்கள் அப்போரில் திட்டமிட்டு நடாத்தப்பட்டு வரும் கூட்டுக் கற்பழிப்புக்கள், கூட்டுக் கொலைகள், கிராமங்கள் அழிக்கப்படுதல் போன்றவையை விபரிக்கின்றன. ஆனாலும் அவைகளின் உண்மை அறிந்துகொள்ளக் கூடியதாக வெளியுலகப் பத்திரிகையாளர் எவரும் உள்ளே போக முடியவில்லை.
இதுவரை திகிராய் விடுதலை அமைப்பினரால் குறிப்பிடப்பட்டு வந்த விடயமான ‘எல்லை நாடான எரித்திரியாவின் படைகளும் எதியோப்பிய மத்திய அரசின் இராணுவத்துடன் போரில் இணைந்துள்ளது,’ உண்மை என்பது ஊர்ஜிதமாகியிருக்கிறது.
எதியோப்பிய அரசின் பெண்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைச்சர் இராணுவத்தினரால் கூட்டுக்கற்பழிப்புகள் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்து வருவதை மறுக்காமல் ஏற்றுக்கொண்டிருக்கிறார். இராணுவத்தினர் திகிராய் பெண்களை வன்புணர்வுக்கு உட்படுத்துவதுடன் அப்பெண்களை அதே கொடுமைக்கு உட்படுத்தும்படி அப்பெண்களின் குடும்ப ஆண்களையும் கட்டாயப்படுத்தியிருக்கிறார்கள்.
எதியோப்பியாவின் ஓர்த்தடொக்ஸ் கிறீஸ்தவர்களின் புனித நகராகக் கருதப்படும், திகிராயிலிருக்கும் அக்ஸோய் நகரில் நடந்த கொடுமைகளை அங்கிருக்கும் சியோன் மேரி தேவாலயத்தின் குருவானவரொருவர் தொலைபேசி மூலம் பத்திரிகையாளரொருவருக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். [கி.பி 576 இல் ஜெருசலேம் வீழ்ச்சியடைய முதல் அங்கே பாதுகாக்கப்பட்ட கடவுள் மோசேக்குக் கொடுத்த உடன்படிக்கைப் பெட்டி அந்தத் தேவாலயத்தில் பாதுகாக்கப்படுவதாக நம்பப்படுகிறது.]
நவம்பர் மாதத்தில் போர் ஆரம்பித்தபோது சியோன் மேரி தேவாலயத்தில் தஞ்சம் வேண்டி ஒதுங்கியிருந்த அகதிகளைப் பக்கத்து நாடான எரித்திரியாவின் இராணுவத்தினர் வளைத்துத் தாக்கிக் ஒளித்துக் கட்டியதாகக் குறிப்பிடப்படுகிறது. அதன் பின்னர் அவர்கள் அந்த நகரம் முழுவதையும் சூறையாடி சுமார் 800 பேரைக் கொன்றொழித்ததாகவும் அந்தக் குருவானவரின் குறிப்பிட்டிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்