“வளர்ச்சிக்கும் கூட்டுறவு, பாதுகாப்புக்கும் கூட்டுறவு,” என்று மாலைதீவுக்கு அள்ளிக் கொடுக்கிறது இந்தியா.
முன்னாள் ஜனாதிபதி காலத்தில் சீனாவின் சுமார் 1.5 பில்லியன் டொலர் பெறுமதியான உதவித் திட்டங்களைப் பெற்ற மாலைதீவைத் தன் பக்கமிழுக்க இந்தியா இந்த நாள் ஜனாதிபதி இப்ராஹிம் முஹம்மத் சோலியின் அரசுடன் எட்டு உதவித் திட்டங்களுக்குக் கைகொடுக்க உறுதிகொண்டிருக்கிறது.
இந்தியா தனது பக்கத்து நாடுகளுக்குக் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை இலவசமாகக் கொடுத்தபோது முதல் நாடாக 1,00.000 தடுப்பூசிகளை மாலைதீவுக்குக் கொடுத்தது. மீண்டும் 20ம் தேதி சனியன்று 1,00,000 தடுப்பூசிகளை மாலைதீவுக்கு வழங்கியதுடன் 40 மில்லியன் டொலர்களை நாட்டின் விளையாட்டுத் துறை அபிவிருத்திக்கான கடனாக வழங்கியுள்ளது.
அத்துடன் மாலைதீவின் துறைமுகத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்தும் திட்டத்துக்காக 50 மில்லியன் டொலர்களைக் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்திருக்கிறது. கடந்த ஆகஸ்டில் 500 மில்லியன் டொலர்களை மாலைதீவின் போக்குவரத்து அபிவிருத்திக்காக வழங்கியிருக்கிறது. மேலும் நாட்டின் அட்டு நகர வீதி அபிவிருத்தித் திட்டத்தைச் செய்துகொடுக்கவும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்திருக்கிறார்.
இதுவரை சுமார் எட்டு வெவ்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் மாலைதீவுக்கு உதவ இந்தியா ஒப்புக்கொண்டிருக்கிறது. பிராந்திய ரீதியில் மாலைதீவைத் தனது ஆதரவுப் பகுதியாக்க சீனா செய்திருக்கும் நடவடிக்கைகளுக்குச் சவாலாகவே இப்போதைய அரசுடன் இந்தியா ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டிருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்