தாய்லாந்தின் தெற்கிலிருக்கும் பிராந்தியங்களில் அமுலாகும் இஸ்லாமிய ஷரியா சட்டங்கள்.
தாய்லாந்தின் தெற்கே மலேசியாவின் எல்லையையடுத்த பகுதியிலிருக்கும் யாலா மாகாணத்தில் சமீபத்தில் கடுமையான ஷரியா சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. விளைவாக வீதிகளில் இளவயதினரான ஆண் – பெண் ஒருவருடன் ஒருவர் போவது, பேசுவது கண்காணிக்கப்படுகிறது.
சுமார் 70 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட தாய்லாந்தில் முஸ்லீம்கள் சுமார் 3 மில்லியன் பேராகும். அவர்கள் வழமையாக சாதாரணமான வாழ்க்கைமுறையையே கைக்கொள்கிறார்கள். தெற்கிலிருக்கும் மூன்று மாகாணங்களில் பெரும்பான்மையினராக வாழும் முஸ்லீம்களிடையே சமீப காலத்தில் பழமைவாத இஸ்லாமியக் கோட்பாடுகளை அறிமுகப்படுத்தப்படுவதாகத் தெரியவருகிறது.
அவற்றுள் ஒன்றான யாளாவின் இஸ்லாமியத் தலைமை நாட்டில் பண்பு கெட்டுப்போயிருப்பதாகவும் அதை மீண்டும் ஒழுங்குசெய்ய இஸ்லாமிய ஷரியாச் சட்டங்களை அப்பகுதியில் கொண்டுவரவேண்டுமென்றும் முடிவுசெய்திருக்கிறது. அம்மாகாணத்துப் பொலீஸ் படையினர் முல்லாவின் கட்டுப்பாடுகளுக்கு இணங்கி அவ்வூரில் கல்யாணம் செய்துகொள்ளாத ஆண் – பெண் வெளியே ஒன்றாக நடமாடவோ, பேசிக்கொள்ளவோ அனுமதிக்கிறார்களில்லை. அவர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்