குறுக்கே நுழைந்து தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் பிரமுகர்களை அனுமதித்தால் தடுப்பூசிகளுக்கான உதவி முடக்கப்படுமென்று லெபனானுக்கு எச்சரிக்கை.

லெபனான் மக்களுக்குத் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை வழங்குவதற்கான உதவியாக 34 மில்லியன் டொலர்களை உலக வங்கி லெபனானுக்கு வழங்க முன்வந்துள்ளது. அவற்றின் மூலம் 60,000 Pfizer-BioNTech தடுப்பு மருந்துகள் இம்மாதம் லெபனானுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. 

https://vetrinadai.com/news/peru-vaccine-scandal/

தமது உதவிகளுக்குக் கட்டாய நிபந்தனையாக “பலவீனமானவர்களுக்கு முதலுரிமை,” என்பது உலக வங்கியினால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ஆனாலும், அரசியல் லஞ்ச ஊழல்களுக்குப் பெயர்போன லெபனானில் செவ்வாயன்று பாராளுமன்றக் கட்டடத்தில் பல அரசியல் புள்ளிகள், அவர்களுடைய உதவியாளர்கள், உறவினர்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டார்கள் என்பது வெளியாகியிருக்கிறது.

ஜனாதிபதி மைக்கல் ஔன், மனைவியார் அவர்களுடைய உதவியாளர்கள், மற்றும் பல அரசியல்வாதிகளும் உலக வங்கி சுட்டிக்காட்டிய முதன்மை வரிசையில் பதிந்துகொள்ளாமலே தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் அதை வெளிப்படையாக அறிவித்துமிருக்கிறார்கள். இதனால் நாடெங்கும் கடும் கொந்தளிப்பு அரசியல்வாதிகள் மீது எழுந்திருக்கிறது.

ஏற்கனவே சுமார் 4,400 பேர் கொவிட் 19 ஆல் இறந்திருக்கிறார்கள். ஜனவரி மாதத்தின் பின்னர் படுவேகமாகத் தொற்றுக்கள் நாடெங்கும் பரவியும் வருகின்றன. தடுப்பு மருந்து விநியோகத்துக்குப் பொறுப்பான அப்துல் ரஹ்மான் பிர்ஸியோ “பாராளுமன்றத்துக்குத் தடுப்பு மருந்துகள் அனுப்பப்பட்ட விடயம் எனக்குத் தெரியாது. இது ஒரு அக்கிரமம்,” என்கிறார்.

உலக வங்கியின் பிராந்தியத் தலைவர் சரோஜ் குமார் ஜா லெபனானுக்குத் தடுப்பு மருந்துகளுக்காகக் கொடுக்கப்படும் உதவிகள் வாபஸ் வாங்கப்படலாம் என்று மிரட்டியிருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *