கோவக்ஸ் திட்டத்தின்படி விநியோகிக்கப்படும் தடுப்பு மருந்துகளைப் பெறும் முதலாவது நாடாக கானா.
கொவிட் 19 தடுப்பு மருந்துகளை வறிய நாடுகளும் பெறும் வசதியை உண்டாக்க உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் இயக்கத்தில் உருவாக்கப்பட்டது கோவக்ஸ் திட்டம். பல நாடுகளின் தேவைகளை ஒன்றுபடுத்தி அவர்களுக்கான தடுப்பு மருந்துகளுக்கான பணக்கார நாடுகளின் உதவிகளையும் பெற்று, ஒன்றுபடுத்துவதே கோவக்ஸ் திட்டமாகும்.
ஆனால், பணக்கார நாடுகள் பலவும் நேரடியாகத் தமக்கு வேண்டிய தடுப்பு மருந்துகளைத் தயாரிப்பாளர்களிடம் ஒப்பந்தம் செய்துக்கொண்டு பெற்றுக்கொள்ள ஆரம்பித்தன. அதனால், ஏற்பட்ட தடுப்பு மருந்துத் தட்டுப்பாட்டால் ஒரு பகுதி வளரும், வறிய நாடுகளும் முண்டியடித்துக்கொண்டு தயாரிப்பாளர்களை நாடி அதிக விலை கொடுத்துத் தடுப்பு மருந்துகளை வாங்கிக்கொள்ள ஆரம்பித்தன. அதனால், எதைத் தடுக்கக் கோவக்ஸ் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதோ அதுவே நடக்க ஆரம்பித்தது.
தயாரிக்கப்பட்டவைகளில் சுமார் 75 % தடுப்பு மருந்துகளை உலகின் 10 பணக்கார நாடுகளே வாங்கிக்கொண்டன. அதனால் கொவக்ஸ் திட்டத்தின் மீதும், உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் மீதும் கடும் விமர்சனம் எழுந்தது. ஐ.நா-வின் காரியதரிசியும், உலகத் தலைவர்கள் பலரும் உலகின் வறிய நாடுகளுக்குத் தடுப்பு மருந்துகள் கிடைக்க விடாமல் செய்த பணக்கார நாடுகளை விமர்சித்தார்கள்.
கடைசியில் ஒரு வழியாக ஆபிரிக்க நாடான கானாவுக்கு 600 தடுப்பு மருந்துகள் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டு புதனன்று அங்கே போய்ச் சேர்ந்ததாக அறிவிக்கப்படுகிறது. தடுப்பு மருந்துகளை வாங்க வசதியற்ற நாடுகளுக்கு மொத்தமாக 2 பில்லியன் தடுப்பூசிகள் இவ்வருடத்துக்குள் கோவக்ஸ் மூலம் விநியோக்கப்படவிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்