நாளை எங்கள் ஊரின் பெயரிலும் ஒரு புது வைரஸ் தோன்றக்கூடும்!
உலக சுகாதார நிறுவனமே (WHO) தொற்று நோய்களுக்குப் பெயர் சூட்டுகின்றது. அதற்கென சர்வதேச நிபுணர்கள் குழு ஒன்று இருக்கிறது. வைரஸ்களின் வகைபிரித்தல் தொடர்பான சர்வதேச குழு (International Committee on Taxonomy of Viruses-ICTV) என்பது அதன் பெயர்.
உலகெங்கும் பெரும் தொற்று நோய்களாகப் பரவுகின்ற வைரஸ் கிரிமி களுக்கு அந்தக் குழுவில் இடம்பெறுகின்ற ‘வைராலஜிஸ்டுகள்’ (virologist), ‘பைலோஜெனெடிஸ்ட் ‘(phylogeneticist) நிபுணர்களே பெயர்களைத் தீர்மானிக்கின்றனர். ஆனால் வைரஸுகளுக்குச் சூட்டப்படுகின்ற அறிவியல் பெயர்கள் ஒருபோதும் புழக்கத்தில் நிலைத்ததில்லை. மாறாக முதன் முதலில் வைரஸ் தொற்று எங்கே கண்டறியப்படுகின் றதோ அந்த இடத்தின், அல்லது நாட்டின், நகரத்தின், ஊரின் பெயரே வைரஸ் கிரிமியின் பெயராகப் பின்னர் வரலாற்றில் நிலைத்து விடுகிறது. அறிவியல் பெயர்களை விடவும் புவியியல் பெயர்களே மக்கள் மத்தியில் புழக்கத்துக்கு இலகுவாகி விடுகின்றன.
அன்றைய ஸ்பெயின் காய்ச்சலில் தொடங்கி சீன வைரஸ் தாண்டி இன்று இந்தியத்திரிபு வரை நாடுகள், நகரங்கள், நதிகள், கிராமங்கள் எனப் பற்பல பெயர்களில் வைரஸ்கள் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
வைரஸ் நோய்கள் அவை முதன்முதலில் எங்கு கண்டறியப்பட்டனவோ அந்தப் பெயர்களில் ஸ்பானிய காய்ச்சல் (Spanish Flu) எபோலா(Ebola), ஷிக்கா (Zika virus) என்று பூகோள ரீதியான முத்திரையுடன்(geographical label) அழைக்கப்பட்டு வந்திருக்கின்றன.
கடந்த 2019 இல் கொரோனா வைரஸ்பரவத் தொடங்கிய போது முதலில்அது உலகெங்கும் சீன வைரஸாகவே முத்திரை குத்தப்பட்டது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வெளிப்டையாக “சைனீஸ் வைரஸ்”(“Chinese virus”) என்று அறிவித்தார். கொரோனா தொற்று நோய்க்குள் அப்போதுதான் அரசியல் புகுந்து கொண்டது. அமெரிக்க ஊடகங்கள் சிலவும் ஆரம்பத்தில் ‘சீன வைரஸ்’ என்றே குறிப்பிட்டன. அது சீன மக்கள் மீதான – குறிப்பாக ஆசிய வம்சாவளியினர் மீதான – வெறுப்புணர்வு தோன்றுவதற்கு வழிவகுத்தது. நாடுகள், மக்கள் மற்றும் பொருளாதாரங்கள் மீது தேவையற்ற தாக்கங்களை உருவாக்குகின்ற இத்தகைய பெயரிடல்கள் குறித்து உலக அளவில் விமர்சனங்கள் எழுந்தன.
தொற்று நோயின் தொடக்க நாட்களில் அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகை செய்தியாளர் மாநாடுகளில் திரும்பத் திரும்ப “சீன வைரஸ்” என்றும் “வுஹான் வைரஸ்” எனவும் பெயர் குறிப்பிட்டதை ஆட்சேபித்து அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளில் அமெரிக்க – சீன நல்லுறவு அமைப்பு ஒன்று இறங்கியது.
உலகில் ஐம்பதுக்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ள திரிபு வைரஸை “இந்திய வைரஸ்” என்று குறிப்பிட்டு அழைப்பதற்கு இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சு தனது கடும் ஆட்சேபத்தை வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் பரவிய வைரஸுக்கு உலக சுகாதார அமைப்பு B.1.617 எனப் பெயரிட்டுள்ளது.எனவே அதனை “இந்திய வைரஸ்” என்று குறிப்பிடும் (“Indian variant”) பதிவுகளைநீக்கிவிடுமாறு சமூகவலைத் தளங்கள் கேட்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் பரவிவருகின்ற இந்தியத் திரிபை “சிங்கப்பூர் வைரஸ்” என்று குறிப்பிடுவதை அனுமதிக்க வேண்டாம் என அந்நாட்டு அரசும் ருவீற்றர் போன்ற சமூகவலைத்தளங்களிடம் கேட்டிருக்கிறது. வைரஸின் பெயர்ச் சர்ச்சைகள் இவ்வாறு நாடுகள் இடையே கசப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகின்றன.
ஒரு நாட்டில் முதல் தொற்றாளர் கண்டறியப்படுகிறார் என்ற ஒரேயொரு காரணத்தை வைத்துக் கொண்டு அந்தநோய்க்கான வைரஸை அந்த நாடுதான்உருவாக்கியது என்றோ, பரப்பியது எனவோ குறிப்பிட்டுக் குற்றஞ்சாட்டிவிடமுடியாது. அந்த வைரஸ் உலகின் வேறுஎந்தப் பகுதியிலாவது தோன்றியிருக் கலாம். எல்லைகள் இனங்கள், தோலின் நிறங்கள் பார்த்து வைரஸ் பரவுவதில்லை. ஒரு நாட்டில் இருந்து அதனைக் காவிச் சென்றவர் மற்றொரு நாட்டில் முதலில் பரிசோதனையில் அகப்பட்டிருக்கலாம். எனவே வைரஸ் கிரிமிக்கு நாடுகளின் பெயர் சொல்லிக் குற்றம் சுமத்தி விடக் கூடாது என்று தொற்று நோய் நிபுணர்களும் அறிவியலாளர்களும் வலியுறுத்துகின்றனர்.
நாடுகள், இடங்கள், நகரங்கள், விலங்குகள் அல்லது ஒரு மக்கள் கூட்டத்தினரைக் குறிக்கின்ற பெயர்களை வைரஸ் கிரிமிகளுக்குச் சூட்டவேண்டாம் என்று அறிவியலாளர்களி டமும் அரசாங்கங்களிடமும் செய்தி ஊடகங்களிடமும் உலக சுகாதார அமைப்பு ஒரு பகிரங்க வேண்டுகோளைவெளியிட்டது.’சீன வைரஸ்’ அல்லது ‘வுஹான் வைரஸ்’ என்று அழைக்கப் பட்டுவந்த கொரோனா வைரஸுக்கு “கொவிட் 19” என்ற அறிவியல் பெயரை 2020 பெப்ரவரியில் அது அறிவித்தது.
“கொரோனா வைரஸ் தொற்று நோய்-2019” (“coronavirus disease 2019″) என்பதை”CO” (corona), “VI” (virus)”D” (disease) “19” (2019) எனச் சுருக்கி “கொவிட்-19” என்ற அறிவியல் பெயரை சுகாதார அமைப்பு வெளியிட்டது. ஆனாலும் சீன வைரஸ் என்ற பெயரை இலகுவில் அதனால் மாற்றிவிட முடியாமற் போனது.
வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் இதே போன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருவதைக் காணலாம்.
“ஸ்பானியக் காய்ச்சல்”(Spanish Flu)
1918 இல் உலகெங்கும் ஸ்பானியக் காய்ச்சல் பரவத்தொடங்கிய காலம் முதலாம் உலகப் போர் மூண்டிருந்தது.போரில் ஈடுபட்டிருந்த நாடுகளில் கடுமையான செய்தித் தணிக்கைகள் அமுல்ப் படுத்தப்பட்டிருந்தன. ஸ்பெயின் நாடுஉலகப் போரில் நடுநிலை வகித்தது.
அங்கு ஊடகங்கள் தணிக்கை இன்றிப்போர்க்காலச் செய்திகளை வெளியிட முடிந்தது. நாட்டில் வைரஸ் காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்ட செய்தியை ஸ்பெயின் எந்தவித ஒளிப்பு மறைப்பும் இன்றி முதலில் வெளியிட்டது. அதற்கு முன்னரே அமெரிக்காவிலும் ஐரோப்பா உட்பட வேறு சில நாடுகளிலும் காய்ச்சல் பரவி இருந்தது. அந்நாடுகள் அதனை இருட்டடிப்புச் செய்தன.
ஆனால் தனது நாட்டில் காய்ச்சலால் முதல் உயிரிழப்பு நிகழ்ந்த செய்தியை ஸ்பெயினே முதலில் வெளியிட்டதால் காய்ச்சலின் பெயர் “ஸ்பானியக் காய்ச்சல்” (Spanish Flu) என்று முத்திரை குத்தப்பட்டது. போர்க் காலத்தில் சீனாவில் இருந்து கனடாவுக்குக் கொண்டு வரப்பட்ட தொழிலாளர்கள் ஊடாக சீனாவில் இருந்தே வைரஸ் காய்ச்சல் உலகில் பரவியது என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இல்லை அது அமெரிக்கப்படை வீரர்கள் மத்தியிலேயே தோன்றியது என்று ஒரு சாரார் வாதிடுகின்றனர். உண்மையில் அந்த வைரஸ் காய்ச்சல் எந்த நாட்டில் தொடங்கியது என்ற விவகாரம்- நூற்றாண்டு கடந்தும் – இன்னமும் விவாதத்துக்குரிய ஒன்றாகவே இருந்து வருகிறது. எனினும் வரலாற்றில் அதற்கு “ஸ்பானியக் காய்ச்சல்” என்ற பெயர் மட்டும் நிலைத்து விட்டது.
எபோலா (Ebola) ஷிக்கா(Zika)
1947 இல் மத்திய ஆபிரிக்காவில் ஷிக்கா காட்டுப் பகுதிகளில் (Zika valley) நுளம்பினால் பரப்பப்படுகின்ற ஷிக்கா வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது. அதனால் அது ஷிக்கா வைரஸ் (Zika virus)எனப் பெயர் பெற்றது. அதே போன்று மிகப் பயங்கரமான உயிர்கொல்லிவைரஸ் என அறியப்படுகின்ற எபோலா(Ebola) கொங்கோ ஜனநாயகக் குடியரசின் (Democratic Republic of the Congo) “எபோலா” நதிக் கரையோரம்முதலில் கண்டறியப்பட்டதால் அதற்கு”எபோலா வைரஸ்” என்னும் பெயர் சூட்டப்பட்டது.
மிக அரிதான ஒரு விலங்கு வைரஸ் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் (Brisbane ) நகருக்கு அருகே ஹென்றா (Hendra) என்னும் இடத்தில் குதிரைகள்மூலம் மனிதர்களுக்குப் பரவியது. 1994 இல் குதிரைகளுக்கும் மனிதர்களுக்கும் உயிராபத்தை விளைவித்த அந்த வைரஸ் “ஹென்றா வைரஸ்” (Hendra Virus) என்று இடத்தின் பெயரிலேயே இன்றைக்கும் அழைக்கப்படுகிறது.
வைரஸ் நோய்கள் சில விலங்குகளின் பெயர்களிலும் அழைக்கப்படுகின்றன. 2009 இல் அமெரிக்காவில் தோன்றியஒருவகை வைரஸ் காய்ச்சல் கிரிமியை ஆய்வு செய்தபோது அதன் மாதிரிகள் பன்றிகளிடையே காணப்படுகின்ற வைரஸ் மரபுகளுடன் ஒத்ததாக இருந்ததன. அதனால் அதற்குப் ‘பன்றிக் காய்ச்சல்'(Swine flu-H1N1) எனப் பெயர் வந்தது.
2012 இல் ஜோர்தான் நாட்டில் தோன்றிசவுதி அரேபியாவில் முதலில் கண்டறியப்பட்ட ஒருவகை கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு ‘மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி’ (Middle East Respiratory Syndrome – MERS)என்று பெயரிடப்பட்டது.
இவ்வாறு தான் இன்று கொவிட்-19வைரஸின் மாறுபாடடைந்த திரிபுகள்பல நாடுகளின் பெயர்களோடு அழைக்கப்படுகின்றன. தெற்கு இங்கிலாந்தில் கென்ற்(Kent) நகரில் முதலில் கண்டறியப்பட்ட திரிபு வைரஸ் (B.1.1.7) உலகெங்கும் “இங்கிலாந்து வைரஸ்” அல்லது “பிரிட்டிஷ் வைரஸ்” என்ற பெயருடன் அழைக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆண்டு டிசெம்பர் முதல் இவ்வாண்டு மார்ச் வரையானகாலப்பகுதிக்குள் தொற்றாளர்களிடையே நடத்தப்பட்ட சோதனைகளில் கண்டறியப்பட்ட வைரஸ் திரிபின் பெயரே” இந்திய வைரஸ்” (Indian coronavirus variant). ஆனால் அது இந்தியாவில்தான் முதலில் தோன்றியதா என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் கிடையாது.
வைரஸ் வகைகளுக்கு சாதாரணமாகச் சூட்டப்படுகின்ற நாடு சார்ந்த பெயர்கள் அவற்றின் புனைபெயர்களே தவிர நிஜப்பெயர்கள் அல்ல. இலகுவாக விளங்கிக் கொள்வதற்காகவே “இந்தியவைரஸ்” என்ற பதம் ஊடகங்களாலும் ஊடகவியலாளர்களாலும் பயன்படுத்தப்படுகின்றது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
மரபு வரிசை ஆய்வு
சனத்தொகை அடர்த்தி மிகுந்த தென்னாசியாவில் இப்போது வைரஸ்தலைவிரித்தாடுகிறது. இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் திரிபு வைரஸ் பரவல் தீவிரமாகி சுகாதார வசதிகளைத் திணற வைத்துள்ளது. வைரஸ் வகைகளின் மரபு வரிசைகளை (genomic sequencing) ஆய்ந்து அறிவதன்மூலமே மாற்றமடைந்த புதிய வடிவங்கள்கண்டறியப்படுகின்றன. அதற்கு தொழில்நுட்ப வசதிகளும் போதிய கால அவகாசமும் அவசியம். இலங்கை போன்ற நாடுகளில் வைரஸின் மரபு வரிசைகளை ஆய்வு செய்யும் வசதிகள்குறைவு. எனவே அங்கு கொரோனா வைரஸ் புது வடிவங்களை எடுப்பதைஉடனடியாக அறிந்து கொள்ள முடியாது.
கொரோனா வைரஸின் இங்கிலாந்து திரிபு விரைவாகக் கண்டறியப்பட்டதற்கு அந்த நாட்டிடம் இருக்கின்ற மரபு அறியும் (genomic sequencing) ஆய்வு வசதிகளே காரணம். ஆனால் எல்லா நாடுகளிலும்அது சாத்தியம் அல்ல. எனினும் எல்லா நாடுகளிலும் மரபு மாற்றங்கள் நிகழ வாய்ப்புண்டு. வியட்நாமில் ஒரு கலப்பு வைரஸ் தோன்றியிருப்பதாக அந்த நாடு அறிவித்துள்ளது. இந்தியத் திரிபும் இங்கிலாந்துத் திரிபும் ஒன்றாய் கலந்து உருவெடுத்த ஒரு புது “அவதாரம்” அது என்று வியட்நாம் கூறுகிறது. இவ்வாறு புதுப்புது அவதாரம் எடுக்கின்ற வைரஸ் கிரிமிகளில் ஒன்று நாளை எங்கள் ஊரிலும் கண்டறியப்பட்டால் அந்த ஊரின் பெயர் உலகப்பிரபலம் ஆகிவிடலாம்.இதுதான் இன்றைய நிலைவரம். எனவே வைரஸின் பெயர்களால் எந்த நாட்டவரும் நொந்து போகக் கூடாது.
பாரிஸிலிருந்து குமாரதாஸன்.