நாட்டின் சனத்தொகையுடன் ஒப்பிட்டால் கொவிட் 19 ஆல் அதிகம் பேர் இறந்த நாடு பெரு ஆகும்.

திங்களன்று தனது நாட்டில் கொவிட் 19 ஆல் இறந்தவர்கள் தொகையை மீளாராய்ச்சி செய்து அதை 69,342 இலிருந்து 180,764 என்று திருத்தி அறிவித்திருக்கிறது. பெருவில் நாட்டின் மருத்துவசாலைகள் நிறைந்து வழிந்து பலருக்கு இடமில்லாமலிருக்கிறது. அவசரகால மருத்துவப் பிரிவுகள் தேவையான உபகரணங்களில்லாததாலும், பிராணவாயுத் தேவையை நோயாளிகளுக்குப் பூர்த்தி செய்ய முடியாததாலும் பெருமளவில் உயிர்களைக் காப்பாற்ற முடியாமல் போனது. இதைக் கவனித்துப் பல மருத்துவ சேசையாளர்களும் உண்மையான இறப்பின் எண்ணிக்கை மிக அதிகமானது என்று எச்சரித்து வந்தார்கள்.

லத்தீன் அமெரிக்காவில் அதிகமான அளவில் மக்கள் இறந்தது பிரேசிலில் ஆகும். அங்கே சுமார் 450,000 பேர் கொவிட் 19 ஆல் இறந்திருக்கிறார்கள். பெருவின் புதிய எண்ணிக்கையின்படி நாட்டின் சனத்தொகையுடன் ஒப்பிட்டால் உலகிலேயே அதிகமானவர்கள் இறந்த நாடாக இருந்த ஹங்கேரியை விடவும் அதிகமானவர்களைப் பெரு இழந்திருக்கிறது.  

32.51 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட பெருவில் 100,000 பேரில் 500 க்கும் அதிகமானவர்கள் கொவிட் 19 ஆல் இறந்திருக்கிறார்கள். ஹங்கேரியில் இறந்தவர்கள் தொகை 100,000 க்கு 300 ஆகும். 

நாடுகளில் கொவிட் 19 ஆல் இறந்தவர்கள் தொகை மொத்தச் சனத்தொகையில் வருடாவருடம் இறப்பவர்கள் தொகையுடன் பிரத்தியேகமாகக் குறிப்பிடப்படும். உலகின் சனத்தொகை ஆராய்வாளர்களுக்கு இந்த விபரங்கள் பயன்படும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *