ஒரு மாதத்துக்கும் அதிகமாக சவூதி அரேபியாவுடன் நடாத்திவரும் பேச்சுவார்த்தைகள் நல்ல முறையில் நகர்வதாகச் சொல்லும் ஈரான்.
சவூதி அரேபியா ஒரு முக்கிய ஷீயா இஸ்லாமிய முல்லாவை மரண தண்ண்டனைக்கு உட்படுத்திய 2016 ம் ஆண்டிற்குப் பின்னர் ஈரானும், சவூதி அரேபியாவும் தமது உயர்மட்ட அரசியல் தொடர்புகளை முற்றாக முறித்துக்கொண்டன. ஈராக்கிய பிரதமர் முஸ்தபா அல் கதீமியின் முயற்சியால் அவர்களிடையேயான பேச்சுவார்த்தைகள் பாக்தாத்தில் ஏப்ரம் மாதத்தில் தொடங்கியிருக்கின்றன.
வெளியே தெரியாமல் இரகசியமாகவே நடந்த அந்த நேரெதிர் கட்சிகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகளை பைனான்சியல் டைம்ஸ் ஊடகம் முதலில் வெளியிட்டது. அதன் பின்னர் அதை ஈரானிய வெளிவிவகார அமைச்சு ஒத்துக்கொண்டது. தற்போது அமைச்சின் மக்கள் தொடர்பாளர் சாட் கதிப்ஸாதே “இரண்டு சாராருக்குமிடையே ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலைப்பாடு ஒன்றை நோக்கி எங்கள் பேச்சுவார்த்தைகள் நம்பிக்கையூட்டும் வகையில் நகர்கின்றன. ஆனால், விபரங்களை வெளியிடக்கூடிய கட்டத்துக்கு நாம் இன்னும் முன்னேறவில்லை,” என்று தெரிவிக்கிறார்.
சிரியா, ஈரான், யேமன் ஆகிய நாடுகளில் ஈரானும், சவூதி அரேபியாவும் வெவ்வேறு தரப்பாரைப் போர்களில் ஆதரித்து வருகின்றன. அதனால், மத்திய கிழக்கில் ஒரு ஸ்திரமான நிலைமை ஏற்படுவதில் இரண்டு தரப்பாருக்குமே முக்கிய பங்கிருக்கிறது. சமீபத்தில் சவூதியின் இளவரசன் முஹம்மது பின் சல்மான், “பிரத்தியேகமான ஒரு நல்ல உறவை ஈரானுடன் கட்டியெழுப்ப விருப்பம்,” தெரிவித்திருப்பதை ஈரான் வரவேற்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்