ஈரானின் மிகப்பெரிய போர்க்கப்பல் “கார்க்” தீவிபத்து ஏற்பட்டு எரிந்து நீரில் மூழ்கியது.
புதனன்று நள்ளிரவுக்குப் பின்னர் ஓமான் குடாவில் பயணித்துக்கொண்டிருந்த “கார்க்” ஈரானின் கடற்படையின் மிகப்பெரிய போர்க்கப்பலாகும். விளங்கிக்கொள்ள முடியாத காரணத்தால் தீப்பிடித்த அக்கப்பல் காப்பாற்றப்பட எடுத்த முயற்சிகளையும் மீறி எரிந்து நீரினுள் மூழ்கியதாக ஈரானியச் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
1977 இல் பிரிட்டனில் கட்டப்பட்ட “கார்க்” ஈரானுடைய கடற்படையின் மிகப்பெரிய மட்டுமன்று அதி முக்கியத்துவம் வாய்ந்த கப்பலுமாகும். 1984 இல் ஈரானியக் கடற்படையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட இக்கப்பல் மற்றைய போர்க்கப்பல்களுக்குத் தேவையான உபகரணங்களையும் கொண்டுசெல்லக்கூடிய ஒன்றாகும். அதனால், மிகப்பாரமான பொருட்களையும் தூக்கக்கூடிய பாரந்தூக்கிகள் இக்கப்பலில் உண்டு என்று குறிப்பிடப்படுகிறது.
“சாவிஸ்” என்றழைக்கப்படும் இன்னொரு ஈரானியப் போர்க்கப்பல் ஏப்ரல் ஆறாம் திகதியன்று எரித்திரியாவுக்கு வெளியே செங்கடலில் தாக்கப்பட்டு மூழ்கியது. அது இஸ்ராயேலின் கண்ணிவெடிகளுக்கு இரையானதாகவும் அது ஒரு பழிவாங்கல் தாக்குதல் என்றும் அமெரிக்க அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
புதனன்று மூழ்கிய “கார்க்” தீப்பிடிக்க முதல் அக்கப்பலில் வெடிகள் கேட்டதாகச் சமூகவலைத்தளங்களில் வெளியாகியிருக்கிறது. கப்பலில் இருந்த சுமார் 400 கடற்படையினரும் காப்பாற்றப்பட்டனர். அவர்களில் இருபது பேர் எரிகாயங்களுக்காக மருத்துவசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
திங்களன்று இஸ்ராயேலின் உளவு அமைப்பான மொஸாட்டின் நிர்வாக இயக்குனராக ஐந்து வருடங்கள் கடமையாற்றியபின் ஓய்வுபெறும் யொஸ்ஸி கோஹன் “நாங்கள் ஈரானின் இருதயத்தின் இருதயத்தை ஊடுருவியிருக்கிறோம்,” என்று சங்கேதமாக குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது. ஈரானின் முக்கிய இராணுவ, தொழில்நுட்ப அமைப்புக்களைக் குறிவைத்து அவைகளில் ஊடுருவுவது கோஹனின் காலத்தில் ஒரு முக்கிய குறியாக இருந்ததை அவர் குறிப்பிட்டார். சமீப வருடங்களில் ஈரானின் தொழிற்சாலைகள், தொழில்நுட்ப மையங்கள், இராணுவ மையங்களில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன. எவ்வளவு முயன்றும் அவைகளுக்கான காரணங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்