டென்மார்க்கில் தஞ்சம் கோருபவர்களை நாட்டுக்கு வெளியே முகாம்களில் தங்கவைத்து விசாரிக்கும் திட்டத்துக்கு டென்மார்க் தயார்.

“டென்மார்க்கில் அரசியல் தஞ்சம் கோருகிறவர்களுக்கு, அவர்கள் ஐரோப்பாவுக்கு வெளியே ஒரு நாட்டுக்கு அனுப்பப்படலாம் என்று புரியவேண்டும். அதன் மூலம் டென்மார்க்குக்கு அரசியல் தஞ்சம் கோரி வருபவர்கள் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கிறோம்,” என்று டென்மார்க் அரசின் பிரதிநிதி பேட்டியொன்றில் ராஸ்முஸ் ஸ்டுக்லுண்ட் குறிப்பிட்டிருக்கிறார்.  சுருக்கமாகச் சொன்னால் அதுவே டென்மார்க்கின் பாராளுமன்றத்தில் ஆதரவு பெற்றிருக்கும் புதிய பிரேரணையின் சாராம்சமாகும்.

https://vetrinadai.com/news/asylum-centre-denmark/

பல மனித உரிமை அமைப்புக்களாலும், ஐ.நா வின் அகதிகள் அமைப்பாலும் கடுமையாக விமர்சிக்கப்படும் டென்மார்க் அரசின் நிலைப்பாடு சமீப வருடங்களில் அங்கே ஏற்பட்டிருக்கும் சமூகப் பிரச்சினைகளால் உண்டாகியது எனலாம். முக்கியமாக மத்திய கிழக்கு, ஆபிரிக்க நாடுகளிலிருந்து டென்மார்க்குக்கு வந்து வாழ்பவர்கள் டென்மார்க்கின் கலாச்சாரத்துடன் ஒன்றுபடாமல் தமக்கான தனித்தனி சமூகங்கள் அமைத்துக்கொள்கிறார்கள் என்ற விமர்சனம் டென்மார்க்கில் பலமாக எழுந்திருப்பதன் விளைவு ஆகும்.

அகதிகள் முகாமை டென்மார்க்குக்கு வெளியே அமைப்பதன் மூலம் எந்த நபர் எங்கிருந்து வருகிறார் என்று கவனிக்க முடியும், அதன் மூலம் முடிந்தால் அந்த நபருக்கான புதிய வதிவிடத்தை அவருக்கேற்ற சமூகத்திலேயே டென்மார்க்குக்கு வெளியேயே அமைத்துக் கொடுக்கலாம் அதன் மூலம் சமூகத்தினுள் சச்சரவுகள் குறையலாம் என்று டென்மார்க்கின் சோஷியல் டெமொகிரடிக் கட்சியினர் கருதுகிறார்கள். 2018 இல் இந்தக் கருத்து விவாதிக்கப்பட்டு அதையடுத்த வருடத்தில் அவர்களுடைய தேர்தல் உறுதிமொழியாகவும் அது குறிப்பிடப்பட்டது.

டேனிஷ் அரசால் முன்வைக்கப்பட்டு நாட்டின் பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் பிரேரணையின்படி டென்மார்க்கில் அகதியாகத் தஞ்சம் கேட்பவரை டென்மார்க் ஐரோப்பாவுக்கு வெளியே அமைக்க விரும்பும் முகாமொன்றுக்கு அனுப்பலாம். அங்கே அந்த நபருக்கு உண்மையிலேயே அரசியல் தஞ்சம் தேவையா என்பது ஆராயப்படும். அதன் பின் அது உண்மையானால் அவரை அந்த முகாம் இருக்கும் நாட்டிலோ அல்லது டென்மார்க்கிலோ, அல்லது டென்மார்க்கால் ஒழுங்குசெய்யப்படும் இன்னொரு நாட்டிலோ வாழ ஒழுங்கு செய்யலாம்.

டென்மார்க் அரசின் பிரேரணை 70 – 24 வாக்குகள் வித்தியாசத்தில் பாராளுமன்றத்தில் வெற்றியடைந்திருக்கிறது. உலகின் வெவ்வேறு நாடுகளுடன் டென்மார்க் தனக்கான முகாம் அமைப்பது பற்றிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கிறது. ஆனால், இதுவரை உறுதியாக எந்த நாட்டையும் குறிப்பிட முடியாது என்கிறார் நாட்டின் குடியேற்ற, சமூக ஒன்றிணைப்பு அமைச்சர் மத்தியாஸ் தெஸ்பாயே [அவரது மூதாதையர் எத்தியோப்பியர்கள்.] 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *