பதின்ம வயதுப் பெண்ணொருத்தியை குடும்பத்துடன் தலைமறைவாக வாழுமளவுக்கு மிரட்டிய 13 பேர் பிரான்ஸ் நீதிமன்றத்தில்.
மிலா என்ற 16 வயதுச் சிறுமி “குரானிலிருப்பதெல்லாம் மற்றவர்கள் மீது வெறுப்புக் காட்டுவது பற்றித்தான். நான் இதைச் சொல்வதால் பலர் என்மீது கோபப்படப்போகிறார்கள். அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை, நான் நினைத்ததைச் சொல்லத்தான் போகிறேன்,” என்று டுவிட்டரில் தனது படத்தில் சொல்லிக் கடந்த வருடம் ஜனவரியில் வெளியிட்டாள். அவளது டுவிட்டர் கணக்கு மூடப்பட்டதுடன் அவளுக்குப் பல பேரிடமிருந்து பல விதமான மிரட்டல்களும் வரத்தொடங்கின.
அவளது கருத்து வெறுப்பை ஊட்டுவது என்று பலரும் டுவிட்டருக்கு முறைப்பாடு செய்ததாலேயே டுவிட்டர் அவளது கணக்கை மூடியது. ஆனால், அவள் குறிப்பிட்டதை அவர்கள் ஒழுங்காக ஆராயவில்லை. எனவே, அவள் டுவிட்டருக்கெதிராகக் குரலெழுப்பினாள். அவளுக்காக பிரெஞ்ச் ஊடகங்களும் டுவிட்டருக்கெதிராகக் குரலெழுப்பின. எனவே மிலா டுவிட்டரின் அடிப்படை கோட்பாடுகளுக்கெதிராக நடந்ததாகக் குற்றஞ்சாட்டிய அவர்கள் அடுத்த நாளே பின்வாங்கிக்கொண்டு அவளது கணக்கைத் திறக்கவேண்டியதாயிற்று.
மிலாவுக்கெதிரான தீவிரவாத மிரட்டல்களோ தொடர்ந்தன. நவம்பரில் பிரான்ஸில் சாமுவேல் பத்தி என்ற ஆசிரியரைத் தீவிரவாதிகள் மிரட்டியது, கழுத்தை வெட்டிக் கொன்ற சம்பவங்களுக்குப் பின்னர் தனது இஸ்லாம் விமர்சன வீடியோவொன்றை டிக் டொக்கில் பதிவுசெய்தாள். அதனால் அவளுக்குக் கடுமையான கொலை மிரட்டல்கள் மோசமான முறையில் வர ஆரம்பித்தன. ‘உன்னைத் கண்ட துண்டமாக்கவேண்டும், கழுத்தை வெட்டவேண்டும், சாமுவேல் பத்தி போன்று கொல்லவேண்டும்,’ போன்ற பல வகைகளிலும் அவள் மிரட்டப்பட்டாள்.
அவளுக்கும் அவளது குடும்பத்தினருக்கும் பிரான்சில் தென்கிழக்கிலிருக்கும் லியோன் நகருக்கு வெளியே பொலீஸ் பாதுகாப்புடன் வதிவிடத்தை ஒழுங்கு செய்யவேண்டியதாயிற்று. பிரெஞ்சுப் பிரதமர் மக்ரோனும் மிலாவுக்காகக் குரல் கொடுத்தார்.
“சட்டம் மிகவும் தெளிவாகச் சொல்கிறது, சமயங்களைக் கிண்டலடிக்கவோ, கேலிச்சித்திரங்களாக்கவோ எங்களுக்குச் சுதந்திரம் இருக்கிறது,” என்று மக்ரோன் குரல் கொடுத்தார்.
மில்லாவுக்கு வந்த 100,000 க்குக் குறையாத வெவ்வேறு விதமான மிரட்டல்களை பொலீசார் ஆராய்ந்தனர். அவைகளின் மூலம் 13 பேரை அவர்களால் அடையாளம் காண முடிந்தது. பதினெட்டு முதல் முப்பது வயதிலான அவர்கள் பிரான்ஸின் வெவ்வேறு பிராந்தியங்களில் வாழ்பவர்களாக இருந்தார்கள்.
அந்தப் பதின்மூன்று பேர் மீது “இணையத்தள மிரட்டல், அத்துமீறல், கொலை மிரட்டல்” போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வியாழனன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
“இதெல்லாம் திடீரென்று வரும் உணர்வில் செய்யப்படுபவை, சமூக வலைத்தளங்களில் முகம் தெரியாதவர்கள் செய்பவைக்கு இவர்கள் பொறுப்பெடுக்கவேண்டியிருக்கிறது,” என்று குறிப்பிட்டு மிரட்டியவர்களின் வழக்கறிஞர்கள் வாதாடுகிறார்கள்.
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அந்தப் பதின்மூன்று பேர்கள் இரண்டு, மூன்று வருடச் சிறைத்தண்டனை, 30,000 எவ்ரோ தண்டம் போன்றவைகளைக் கட்டவேண்டியிருக்கும்.
சாள்ஸ் ஜெ. போமன்