நூறு மில்லியன் பேரில் ஒரு விகிதத்தினருக்கே தடுப்பூசி போட்ட வியட்நாம் தனது மக்களிடம் உதவி நிதி கேட்டுக் கையேந்துகிறது.
கடந்த வருடத்தில் உலகின் பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரம் பின்னடைந்தபோது ஒரு சில நாடுகள் வளர்ச்சியடைந்தன. அவைகளிலொன்றான வியட்நாமின் அந்த முன்னேற்றத்துக்குக் காரணம் நாட்டில் கொரோனாத் தொற்றுக்கள் அதிகம் பரவாமலிருந்ததும், இறப்புக்கள் மிகக்குறைவாக இருந்ததுமேயாகும். 2020 ஜனவரியில் அங்கே தொற்றுக் கண்டறியப்பட்டாலும் அதையடுத்த நான்கு மாதங்களில் 300 பேருக்கு மட்டுமே தொற்றியிருந்தது. அச்சமயத்தில் கொரோனா இறப்புக்களே இருக்கவில்லை. நவம்பர் மாத இறுதியில் 34 பேர் மட்டுமே அவ்வியாதியால் இறந்திருந்தார்கள்.
சர்வதேச ரீதியில் கொரோனாத் தொற்றுக்களைக் கட்டுப்படுத்தும் திட்டங்களில் வெற்றியடைந்த நாடுகளிலொன்றாகப் பேசப்பட்ட விரல் விட்டு எண்ணக்கூடிய நாடுகளில் ஒன்றாக இருந்தது வியட்நாம். ஆனால், அந்த வெற்றி அதிர்ஷ்டம் இந்த வருடம் அந்த நாட்டைக் கைவிட்டுவிட்டது எனலாம்.
கடந்த வாரம் கைப்பேசியுள்ளவர்களெல்லாம் ஆகக்குறைந்தது மூன்று முறை “அரசின் கொரோனாத் தடுப்பூசித் திட்டத்துக்கு நிதி தாருங்கள்,” என்ற செய்தியைப் பெற்றார்கள். அரச ஊழியர்கள் ஒரு நாள் சம்பளத்தைத் தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நாட்டின் 100 மில்லியன் மக்களில் 70 % க்குத் தடுப்பு மருந்து கொடுக்க 1.1 பில்லியன் டொலர்கள் தேவையென்று நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி அரசு குறிப்பிட்டிருந்தது. ஆனால், அதற்காக அவர்கள் ஒதுக்கியது 630 மில்லியன் டொலர்கள் மட்டுமே.
அரசின் நிதிக்கு செவ்வாயன்றுக்குள் 181 மில்லியன் டொலர்கள் சேர்ந்திருப்பதாகவும் மேலும் 140 மில்லியன் டொலர்கள் நிறுவனங்களின் மூலம் கிடைக்குமென்றும் அரசு தெரிவிக்கிறது. உலகின் மிகவும் சர்வாதிகார அரசு என்று குறிப்பிடப்படும் வியட்நாம் கருத்துச் சுதந்திரத்தைக் கடுமையாகக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் நாடாகும். எனவே நாட்டின் கொம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தை நம்பாதவர்கள் பலர் நிதி கொடுக்கத் தயாராக இல்லை.
சாள்ஸ் ஜெ. போமன்