“டொனால்ட் டிரம்ப்புக்கிணையான படைப்பு” போரிஸ் ஜோன்சனைக் கார்பிஸ் குடா கடற்கரையில் சந்தித்தார் ஜோ பைடன்.
தனக்குப் பிடிக்காத பல விடயங்களிலும் டொனால்ட் டிரம்புக்கு ஒத்துப் போகிறவராக இருந்த போரிஸ் ஜோன்சனை ஒரு தடவை “டொனால்ட் டிரம்ப்புக்கிணையான படைப்பு” என்று குறிப்பிட்டிருக்கிறார் ஜோ பைடன். நீண்டகால அரசியல் நெருக்கமுள்ள இரண்டு நாடுகளின் தலைவர்கள் என்ற முறையில் அவ்விருவரும் தம்பதி சமேதரராகச் சந்தித்துக்கொண்டு ஜி 7 மாநாடு நடக்கவிருக்கும் அந்தக் கடற்கரை வாசஸ்தலத்தில் உலகப் பத்திரிகைகளுக்குப் பல படங்களைத் தீனியாகக் கொடுத்தார்கள்.
தனது முதலாவது வெளிநாட்டுப் பயணத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பிரிட்டனில் தெரிந்தெடுத்த அமெரிக்க ஜனாதிபதி ஞாயிறன்று இரவு அங்கே வந்திறங்கியதும் தனது நாட்டின் இராணுவத்தினரிடையே உரையாற்றினார்.
“அமெரிக்கா மீண்டும் சர்வதேச அரசியலுக்குள் தனது பங்கை அளிக்கத் திரும்பி வந்துவிட்டது,” என்பதே அவரது செய்தியின் முக்கிய மாத்திரையாக இருந்தது. அதனால ஒன்றியத்திலிருந்து பிரிட்டனை வெளியேற்றுவதில் ஈடுபட்ட போரிஸ் ஜோன்சனை மனதாரப் பிடிக்காவிட்டாலும் கூட அவருடன் சேர்ந்து பணியாற்றுவது காலட்டத்திற்கு ஜோ பைடனுக்கு அவசியமான ஒரு தேவையாகும்.
பிரிட்டனின் தலைவரைச் சந்திப்பதுடன், ஜி 7 மாநாட்டில் பங்கெடுக்கவிருக்கும் மற்றைய ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களையும் சந்தித்து “அமெரிக்கா – ஐரோப்பா மீண்டும் ஒன்றிணைந்தது” என்ற கருத்தை உலகளாவிய ரீதியில் காட்டுவது ஜோ பைடனின் விஜயத்தின் முக்கிய நடப்பாக இருக்குமென்பது பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன் மூலம் டொனால்ட் டிரம்ப்பின் வெளிநாட்டு அரசியல் கோட்பாட்டின் காலத்தைத் தனக்குப் பின்னாலிருப்பதாக அவர் காட்டிக்கொள்ள விரும்புகிறார்.
“ஒபாமா ஒரு அரைக் கென்யாக்காரர், பிரிட்டனை வெறுப்பது அவரது இரத்தத்தில் ஊறியது,” என்று ஜோ பைடனுக்கு நெருக்கமான அமெரிக்கத் தலைவர் பரக் ஒபாமா பற்றி போரிஸ் ஜோன்சன் ஒரு தடவை குறிப்பிட்டது. எனவே, ஜோன்சன் தரப்பிலும் ஜோ பைடன் மீதிருக்கும் கண்ணோட்டத்தை கணிக்கலாம். வேறு பல விடயங்கள் உட்பட, ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்ந்தும் நல்லுறவு பேணுவது என்ற முக்கிய அவசியத்தில் அவருக்கும் பாதுகாப்புக் கூட்டமைப்பான நாட்டோவியின் முக்கிய இயந்திரமான அமெரிக்காவின் ஆதரவு தேவையாக இருக்கிறது.
இந்த நிலைமையில் சந்தித்த அந்தத் தலைவர்களிருவரும் தாம் ஒன்றுசேர்ந்து சர்வதேசத்துக்குக் கொடுக்கும் நல்ல செய்திகளை வெளியிடுவதில் முதல் நாளைச் செலவிட்டார்கள் எனலாம்.
ஜி 7 நாடுகள் ஒன்றிணைந்து உலகின் வறிய, நடுத்தர வசதியுள்ள நாடுகளுக்கு ஒரு பில்லியன் கொவிட் 19 தடுப்பு மருந்துகளை வழங்க உறுதியளிக்கவிருக்கிறது. அமெரிக்கா ஏற்கனவே அறிவித்திருக்கும் 500 மில்லியன் தடுப்பு மருந்துகள், பிரிட்டன் 100 மில்லியன் ஆகியவை உட்பட மொத்தமாக ஒரு பில்லியன் 2023 க்கு முன்னர் இலவசமாக அந்த நாடுகளுக்குக் கொடுக்கப்படும். அவற்றில் 80 % உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் கோவாக்ஸ் திட்டம் மூலமாக அந்தத் தடுப்பு மருந்துகள் விநியோகிக்கப்படும்.
ஜி 7 நாடுகளின் மாநாடு தவிர, நாட்டோ மாநாடு, அமெரிக்க – ஐரோப்பிய ஒன்றிய மாநாடு ஆகியவைகளில் பங்கெடுக்கும் ஜோ பைடன், ஜெனிவாவில் பதவியேற்றபின் முதல் தடவையாக ரஷ்ய ஜனாதிபதி ஜோ பைடனையும் சந்திக்கவிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்