இடி மின்னல் புயல் தாக்கம்! தேவாலயக் கூரை பறந்தது!!
கடும் வெப்பத்தை அடுத்து தோன்றும் இடி மின்னலுடன் கூடிய புயல் மழை பரவலாகப் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பாரிஸ் பிராந்தியம் உட்பட51 மாவட்டங்கள் செம்மஞ்சள்(vigilance orange) எச்சரிக்கைக் குறியீட்டில் உள்ளன. நூற்றுக் கணக்கான மின்னல் தாக்குதல்கள் பதிவாகி உள்ளன.
பாரிஸின் பூங்காக்கள், பொழுதுபோக்குஇடங்கள், இடுகாடுகள் என்பன பொதுமக்களுக்கு மூடப்பட்டுள்ளன என்று நகரசபை அறிவித்துள்ளது.இல்-து-பிரான்ஸின் Essonne மாவட்டத்தின் மேற்குப்பகுதிகளில் மின் தடை ஏற்பட்டுள்ளது. RER C, D, E ரயில் சேவைகளிலும் இன்று மாலை தடங்கல்கள் ஏற்பட்டன.
நாட்டின் மேற்கு மத்திய மாவட்டமான Indre-et-Loire பகுதியில் கிராமம் ஒன்றில்இடிமின்னலுடன் மினி சூறாவளி தாக்கியதில் தேவாலயம் ஒன்றின் மணிக்கோபுரக் கூம்புப் பகுதி பிய்த்தெறியப்பட்டது. அதன் இடிபாடுகள் வீழ்ந்ததால்வாகனங்கள் சில சேதமடைந்தன. எவருக்கும் காயம் ஏற்படவில்லை. அருகே அமைந்திருந்த கிராம மண்டபத்தின் கூரையையும் புயல் காற்று பெயர்த்துள்ளது. அங்கு தேர்தல் வாக்குப் பதிவுக்கான ஆயத்தப்பணிகள் நடை பெற்றுக்கொண்டிருந்தன. அதிர்ஷ்ட வசமாக எவருக்கும் காயங்கள் ஏற்பட வில்லை.
Indre-et-Loire மாவட்டத்தின் வைன் தோட்டப் பிரதேசமாகிய Saint- Nicolas-de-Bourgueil பகுதியில் மற்றொரு தேவாலயம் ஒன்றும் நாற்பதுக்குமேற்பட்ட வீடுகளும் புயலினால் சேதமடைந்துள்ளன. கண்காணிப்பு ஹெலிக்கொப்ரர்கள் மூலம் சேதங்கள் மதிப்பிடப்பட்டு வருகின்றன.
மின்விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.புயல் மழை சமயங்களில் கடைப்பிடிக்கவேண்டிய விழிப்பு அறிவுறுத்தல்களை பாரிஸ் நகர நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மரங்களின் கீழ் பாதுகாப்பு தேடவேண்டாம்.காடுகளில் நடப்பதை தவிர்க்கவும்.
வீடுகளுக்கு வெளியே கைத் தொலைபேசி, மற்றும் டிஜிட்டல் சாதனங்களைப் பாவிப்பதைத் தவிர்க்கவும்.
தரைகளில் வீழ்ந்து கிடக்கக் கூடியமின்சார வயர்களைத் தொட வேண்டாம்.
இயன்றவரை வெளியே செல்வதை, வாகனங்களில் பயணிப்பதைத் தவிர்க்கவும்.
குமாரதாஸன். பாரிஸ்.