“ஆபிரிக்காவுக்குத் திரும்பிப்போ,” என்று பிரெஞ்ச் பாராளுமன்ற உறுப்பினர் கூச்சலிட்டதால் சபாநாயகர் கூட்டத்தை ஒத்திவைத்தார்.

வலதுசாரித் தேசியவாதப் பாராளுமன்ற உறுப்பினரொருவர் கறுப்பின சகாவை நோக்கி. “ஆபிரிக்காவுக்குத் திரும்பிபோ,” என்று கூச்சலிட்டார். முதல் தடவையாகப் பாராளுமன்ற உறுப்பினராகிய கிரகோரி டெ பூர்னாஸ் [Grégoire de Fournas] என்பவரே அந்தக் கூச்சலைப் போட்டுச் சபாநாயகரால் கூட்டத்தை ஒத்திவைக்கச் செய்தவராகும்.

கார்லோல் மார்ட்டினெஸ் பிலொங்கோ [Carlos Martens Bilongo] இடதுசாரிப் பாராளுமன்ற உறுப்பினர் சமீப வாரத்தில் மத்தியதரைக்கடலில் காப்பாற்றப்பட்ட அகதிகள் பற்றிக் கேள்வியெழுப்பியபோதே [Qu’il retourne en Afrique]  அது நடந்தது. அகதிகளைக் காப்பாற்றும் அமைப்பினரால் காப்பாற்றப்பட்ட பின்னர் எந்த நாட்டினுள்ளும் அனுமதிக்கப்படாத 234 அகதிகளுக்கு உதவுவது பற்றி பிலொங்கோ கோரிக்கை வைத்தார்.

 “அவரது நடவடிக்கை வெட்கத்துக்குரியது. எனது தோலின் நிறத்தை அவர் இழிவாகப் பேசுகிறார். நான் பிரான்ஸில் பிறந்த, பிரெஞ்சுப் பாராளுமன்றத்தின் உறுப்பினர்,” என்று குறிப்பிட்டார் பிலொங்கோ.கொங்கோவைப் பின்புலமாகக் கொண்ட அவர் பாரிஸில் பிறந்து வளர்ந்து ஆசிரியராகக் கடமையாற்றியவராகும்.

பூர்னாஸின் கூற்றினால் அமளிதுமளிப்பட்ட சபைக்குள் பலர் அவரை வெளியேற்றும்படி கோரினர். பிரதமர் எலிசபெத் போர்ன்  “நிறவாதத்துக்கு ஜனநாயகத்தில் இடமில்லை,” என்று கண்டித்தார். சபையின் உறுப்பினரின் அந்தச் செயலால் தான் வேதனைப்படுவதாக ஜனாதிபதி மக்ரோன் குறிப்பிட்டார். இடதுசாரிக் கட்சித் தலைவரான ஜோன் லுக் மெலன்சோன் தனது கருத்தாக, “பூர்னாஸின் நடத்தை கிஞ்சித்தும் பொறுத்துக்கொள்ள முடியாதது,” என்றார்.

வெள்ளியன்று பாராளுமன்றக் குழு ஒன்று பூர்னாஸின் செயலைத் தண்டிக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதை விவாதிக்கவிருக்கிறது. அவரைத் தற்காலிகமாகச் சபைக்கூட்டங்களிலிருந்து தடை செய்யவேண்டுமென்றே பலரும் விரும்புகிறார்கள். 

பூர்னாஸ் கட்சித் தலைவரான மரின் லு பென் தனது கட்சிக்காரரை ஆதரித்து , “எங்கள் அரசியலுக்கு எதிரானவர்கள் உண்டாக்கியிருக்கும் சர்ச்சையால் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது,” என்று டுவீட்டியிருந்தார்.

அவரது கட்சி ஜோர்டான் பார்டெல்லா என்ற புதிய தலைவரை இவ்வார இறுதியில் தேர்தெடுக்கிறது. தனது கட்சி உறுப்பினர் “பிலொங்கோவை ஆபிரிக்காவுக்குத் திரும்பும்படி சொல்லவில்லை, குறிப்பிட்ட கப்பலில் வந்த அகதிகளைத் திருப்பியனுப்பும்படியே கோரினார். எங்கள் கட்சி பிரான்ஸுக்கு வரும் அகதிகளை முழுமையாக நிறுத்திவிடும்படி கோருகிறது,” என்று பேட்டியொன்றில் தெரிவித்தார்.

சாள்ஸ் ஜெ. போமன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *