மிகப் பெரிய இலக்கத்தைக் கொண்ட குடும்பத்துக்குச் சான்றிதழும் ஒரு லட்சம் பரிசும் அறிவித்திருக்கும் மிஸோராம் அமைச்சர்.
தனது மாநிலத்தின் சனத்தொகையைக் குறைப்பதற்காக அசாம் மாநிலம் பெரிய குடும்பங்களுக்குப் பொருளாதார, சமூக முட்டுக்கட்டைகளை விளைவிக்கும் அதே சமயம் சுமார் 21,000 சதுர கி.மீ பரப்பளவுள்ள மாநிலமான மிஸோராம் குறைந்துவரும் சனத்தொகை பற்றிச் சஞ்சலப்படுகிறது. மிஸோராமின் சனத்தொகை பதினொரு இலட்சத்துக்கும் குறைவானதாகும்.
சுமார் 91 விகித பரப்பளவு காடாகவே இருக்கும் மிஸோராமில் சதுர கி.மீற்றருக்கு 52 பேர் வாழ்கிறார்கள். அஸாமிலோ அது 398 ஆகும். இந்தியாவில் சராசரியாக ஒரு சதுர கி.மீற்றருக்கு 382 பேர் வாழ்கிறார்கள். ஒரு பக்கம் பங்களாதேஷுக்கும், மேலும் இரண்டு பக்கம் மியான்மாருக்கும் இடையே இருக்கும் மிஸோராம் பின் தங்கிய ஒரு மாநிலமாகும். பெரும்பாலும் கிறீஸ்தவர்க்ளைக் கொண்டது.
உலகின் மிகப்பெரிய குடும்பத்தைக் கொண்ட இறந்துபோன ஸியோனா சானா மிஸோராமில் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரொபெர்ட் ரொமாவியா ரொய்ட் என்ற மிஸோராமின் விளையாட்டுத்துறை அமைச்சரே பெரிய குடும்பம் அமையுங்கள் ஒரு லட்சம் பரிசு என்று அறைகூவல் விடுத்திருப்பவராகும். அவர் மாநிலத்தின் Aizawl FC என்ற உதைபந்தாட்டக் குழுவின் சொந்தக்காரராகும்.
“எங்கள் பிராந்தியத்தின் சனத்தொகை குறைவாக இருப்பதும், பிள்ளைப் பெறுதல் குறைவாக இருப்பதும் பல வருடங்களாகவே எமது முன்னேற்றத்துக்கு இடைஞ்சலாக இருந்துவருகிறது,” என்கிறார் பரிசை அறிவித்திருக்கும் அமைச்சர். ஒரு லட்சம் பரிசும், பரிசுக் கோப்பையும், சான்றிதழும் அக்குடும்பத்துக்கு வழங்கப்படுமென்கிறார் அவர்.
ரொபர்ட் ரொய்ட் மாநிலத்தின் மிகப் பெரும் பணக்காரர்களில் முக்கியமானவர். இவர் மோடி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி ஆகியவர்களின் அரசியலுக்கெல்லாம் எதிரியாகும். தன்னைச் சுற்றுப்புற சூழல் ஆதரவாளரென்று சொல்லிக்கொள்ளும் இவர் பல கார்களை வைத்திருக்கிறார். ஆனாலும், தனது பிரச்சாரத்தை மலைப்பிரதேசமான மிஸோராமில் கால்நடையாகவே செய்தவர். தனது விளையாட்டு ஆர்வம், உதைபந்தாட்டக் குழு ஆகியவைகளால் பெரிதும் பிரபலமானவர்.
சாள்ஸ் ஜெ. போமன்