இவ்வருடக் கடைசிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திடம் 500 – 700 மில்லியன் தடுப்பு மருந்துகள் அளவுக்கதிகமாக இருக்கும்.
இவ்வருட ஆரம்பத்திலிருந்த கொவிட் 19 தடுப்பு மருந்து வறட்சி நீங்கி ஐரோப்பிய ஒன்றியம் வெவ்வேறு நிறுவனங்களிடமிருந்து வரவிருக்கும் தடுப்பு மருந்துகளால் மூழ்கிப்போகுமென்று கணிக்கப்படுகிறது. ஏற்கனவே வறிய நாடுகளுக்குத் தருவதாக உறுதி கொடுத்தவை தவிர 500 – 700 மில்லியன் தடுப்பு மருந்துகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் கைவசம் இன்னும் சில மாதங்களில் இருக்குமென்று தெரிகிறது.
அஸ்ரா செனகாவிடமிருந்து தாமதமாகக் கிடைக்கப்போகும் தடுப்பு மருந்துகள் தவிர ஜான்சன், பைசர், மொடர்னா ஆகிய நிறுவனங்களிடம் ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தப்படி வாங்கப்படும் தடுப்பு மருந்துகளே அவையாகும். அவற்றை வழக்கம் போலவே ஒன்றிய நாடுகளிடம் பிரித்துக் கொடுக்கப்படும். அந்த நாடுகள் அவைகளைத் தாம் எப்படிப் பாவிப்பதென்று முடிவெடுக்கும்.
சில நாடுகள் தமது 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்குத் தடுப்பு மருந்துகளைக் கொடுக்கும் திட்டங்களை விரைவில் ஆரம்பிக்கவிருக்கின்றன. மேலும் சில நாடுகள் தமது நட்பு நாடுகளுக்கு ஒரு பகுதியை இலவசமாகக் கொடுக்கவிருக்கின்றன. வறிய நாடுகள் மட்டுமன்றி ஜப்பான், தென் கொரியா, கனடா போன்ற பணக்கார நாடுகளிலும் தேவைக்கேற்ற அளவு தடுப்பு மருந்துகள் இல்லை. எனவே வாங்கிய விலைக்கே ஒரு பகுதித் தடுப்பு மருந்துகள் விற்கப்படுமென்றும் தெரிகிறது.
அதே சமயம் தடுப்பு மருந்துத் திட்டங்களை ஆரம்பித்த வறிய நாடுகள் – முக்கியமாக ஆபிரிக்க நாடுகள் – தமது திட்டத்தைத் தொடர முடியாமல் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியிருப்பதாக உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு அறிவிக்கிறது. தென்னாபிரிக்க ஜனாதிபதியும் தமக்காகத் தடுப்பு மருந்துகளைத் தரும்படி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்