ஞாயிறன்று கனடாவின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறந்தன, இறந்துபோன பழங்குடிக் குழந்தைகளை நினைவுகூருவதற்காக!

தங்கியிருந்து படிக்கும் கத்தோலிக்க பாடசாலைகளின் அருகேயிருந்து சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான பிள்ளைகளின் எலும்புக்கூடுகள் கனடாவை அதிரவைக்கும் செய்தியாகியிருக்கின்றன. பழங்குடியினரின் பிள்ளைகளைச் சமூகத்துடன் சேர்ந்து வாழ்வதற்காகப் பழக்கவே அந்தப் பாடசாலைகள் இயக்கத்துக்குக் கொண்டுவரப்பட்டன.

https://vetrinadai.com/news/remains-school-children/

1800, 1900 ம் ஆண்டுகளில் இயங்கிவந்த அதே போன்ற பாடசாலைகளினருகில் மேலும் அதிகக் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் காணப்படலாம் என்று நம்பப்படுகிறது. பழங்குடியினரின் பிரதிநிதிகள் பதியப்படாத அந்தப் பிள்ளைகளின் இறப்புகளைப் பற்றிய மேலும் விபரங்களை அறிய ஒரு ஆராய்ச்சிக் குழு அமைக்கப்படவேண்டும் என்று கோரி வருகிறார்கள். இறந்துபோன அந்தக் குழந்தைகளின் நினைவு கூரலாகவே நேற்று கனடியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன. அத்துடன் பல இடங்களில் ஞாபக நிகழ்ச்சிகளும் நடாத்தப்பட்டன.

கனடாவின் பழங்குடிமக்கள் தலைமுறைகளாக கோரமான நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுடைய குழந்தைகளை அரசு வளர்ப்பதற்காக அனுப்பிய கத்தோலிக்க பாடசாலைகளில் அவர்கள் பலவந்தங்களுக்கும், வன்முறைக்கும் உட்படுத்தப்பட்டதாகப் பலர் சாட்சி கூறியிருந்தனர். ஆனால், கனடியச் சமூகத்தில் அவைகள் பொதுவாக நம்பிக்கையைப் பெறவில்லை.

பாடசாலைகளில் குழந்தைகளிடையே கடும் தொற்று நோய்கள் உண்டாகிப் பலர் இறப்பதும் வழக்கமாக இருந்தது. அப்பாடசாலைகளில் குருமார், துறவிகளால் பலவந்தங்களுக்கும், பாலியல் உறவுகளுக்கும் பயன்படுத்தப்பட்டுப் பிறந்து இறந்த சிசுக்கள் பற்றியும் பலர் சாட்சிகள் கூறியிருந்தனர். அப்படியான குழந்தைகளே பதியப்படாமல் இறந்துபோன அக்குழந்தைகளாக இருக்கலாமென்ற ஐயம் எழுப்பப்படுகிறது.

“கடவுளின் சேவகர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் ஏன் இப்படிச் செய்தார்கள். இதுபற்றி ஏன் பாப்பாண்டவர் இன்னும் கண்டுகொள்ளவில்லை,” என்ற குரல்களும் பழங்குடியினர்களின் அமைப்புக்களால் எழுப்பப்படுகின்றன.

கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் இருந்த பாடசாலைகளுடன் தொடர்புள்ள கத்தோலிக்க தேவாலையங்கள் என்று கருதப்படும் நான்கு தேவாலயங்கள் சமீபத்தில் எரிக்கப்பட்டிருக்கின்றன. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *