தனியாரின் விபரங்களைக் கையாள்வதில் சட்டத்தை மீறியதாக வட்சப் மீது அயர்லாந்து 267 மில்லியன் டொலர் தண்டம் விதித்திருக்கிறது.
அயர்லாந்தின் தனியார் விபரங்களைப் பாதுகாக்கும் அமைப்பு வட்சப் நிறுவனத்தின் மீது பெரிய தண்டமொன்றை விதித்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தினால் 2018 முதல் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட தனியார் விபரங்களைப் பேணும் சட்டங்களுக்கு [GDPR] ஏற்றபடி வட்சப் இயங்கவில்லை என்பதே அதற்காகக் காட்டப்பட்டிருக்கும் காரணமாகும்.
பேஸ்புக்கின் நிறுவனமான வட்சப் தனது வாடிக்கையாளர்களிடமிருந்து தான் சேர்க்கும் விபரங்களை எப்படிப் பாவிக்கிறது, என்பது பற்றி விபரங்களை வாடிக்கையாளருக்குத் தெளிவாகச் சொல்லவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. தனது உரிமையாளரான பேஸ்புக்குடன் வட்சப் தனது வாடிக்கையாளர்களின் தொலைபேசி இலக்கங்கள், பொருளாதார கொள்வனவுகள், விலாசங்கள், பாவிக்கும் தொலைபேசி பற்றிய விபரங்கள் உட்பட மேலும் சில விபரங்களைப் பகிர்ந்துகொள்கிறது. ஆனால், தனியாரின் சம்பாஷணை விபரங்கள், தொடர்புகொண்ட நேரங்கள், இட விபரங்களை வட்சப் பகிர்ந்துகொள்வதில்லை.
“எமது நிறுவனம் எமது வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையான, பாதுகாப்பான சேவையை வழங்குவதில் மிகவும் தீவிரமாக இருக்கிறது. எனவே, நாம் இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. இதை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்போகிறோம்,” என்று வட்சப் நிறுவன உயரதிகாரி விதிக்கப்பட்டிருக்கும் தண்டம் பற்றிக் குறிப்பிடுகிறார்.
அயர்லாந்தில் வட்சப் தவிர, கூகுள், டுவிட்டர் நிறுவனங்களின் தலைமைக் காரியாலயங்களும் இருக்கின்றன.குறிப்பிட்ட இதே ஐரோப்பிய ஒன்றியச் சட்டத்தை மீறியதாக, ஜூலை மாதம் அமெஸான் நிறுவனம் மீது 746 மில்லியன் எவ்ரோவும், 2019 இல் கூகுள் பிரான்ஸ் 50 மில்லியன் எவ்ரோவும் தண்டம் விதித்திருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்