சீனாவின் மிகப்பெரிய கட்டட நிறுவனம் திவாலாகும் நிலையை நெருங்குகிறது.

சமீப வருடங்களில் சீன அரசின் பொருளாதார, வர்த்தகக் கொள்கைகளைத் தமக்குச் சாதகமான இறக்கைகளாக்கிப் பெருமளவில் வளர்ந்த நிறுவனங்களிலொன்று எவர்கிறாண்ட் [Evergrande]. கடன்களை வாங்கிக் கட்டடத்துறையில் மட்டுமன்றி வெவ்வேறு துறைகளிலும் முதலீடுகள் செய்த அந்த நிறுவனம் சீனாவின் மிகப்பலமான பொருளாதாரச் சாம்ராச்சியாகவும் வளர்ந்தது. தற்போது உலகில் அதிகம் கடன் பளு உள்ள நிறுவனங்களில் ஒன்றாகத் திவாலாகக்கூடிய நிலையிலிருப்பதாக வர்த்தக வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.

தனது நாட்டில் அளவுக்கடங்காமல் வளர்ந்திருக்கும் நிறுவனங்களின் பொருளாதார இருப்பு, நடப்பு ஆகியவற்றைக் கவனித்துச் சீன கம்யூனிஸ்ட் அரசு சமீபத்தில் அவர்களைத் தண்டித்தும், கட்டுப்பாடுகளை விதித்தும் வருகிறது. அதன் விளைவாகவே முதலீடு செய்பவர்கள் கடன்பளுவுள்ள, பிரச்சினைக்குரிய நிறுவனங்களில் முதலீடுகள் செய்பவர்களைத் தவிர்த்து வருகிறார்கள். அதனால், அந்த நிறுவனங்களிடம் உடனடியாக வர்த்தகத்தில் செலவிடத் தேவையான பணப்புழக்கம் குறைந்து வருகிறது. 

நாட்டின் பொருளாதார வளர்ச்சியால் பல மில்லியன் சீனர்களுடைய வருமானமும் அதிகமாகியிருக்கிறது. அவர்களில் பலர் தமாது சேமிப்புடன் வங்கிகளிடன் கடன் வாங்கி வீடுகள் கட்டும் நிறுவனங்களிடம் கொடுத்திருக்கிறார்கள். எவர்கிராண்டே போன்ற நிறுவனங்கள் அந்த நடுத்தர வர்க்க மக்களுக்கு வீடுகளின் படங்களையே முதலில் காட்டுகிறது. சில வருடங்களின் பின்னர் வீடுகள் கட்டப்பட்டு ஒப்படைக்கப்படுகின்றன.

128 நகரங்களில் சுமார் 1,300 கட்டடத் திட்டங்களில் எவர்கிறாண்ட் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. ஆனால், சமீப காலத்தில் அந்த நிறுவனம் புதிய முதலீடுகள் இல்லாததால் லட்சக்கணக்கானோருக்கு உறுதிகொடுத்த வீடுகளைக் கட்டிமுடித்துக் கொடுக்கவில்லை. தமக்குக் கொடுக்கப்பட்ட உறுதி பொய்யானதால் பல்லாயிரக்கணக்கில் அவர்கள் நிறுவனத்தை எதிர்த்துக் கோஷமிட்டு வருகிறார்கள்.

Hengda Group என்ற குட்டி நிறுவனத்தை 1996 இல் ஆரம்பித்த ஹுய் கா யான் தான் படிப்படியாக எவர்கிறாண்ட் நிறுவனத்தைக் கட்டியெழுப்பினார். தற்போது அவரது தனிப்பட்ட சொத்தின் மதிப்பு சுமார் 11 பில்லியன் டொலர் என்று கணிக்கப்படுகிறது.    

வர்த்தக நிறுவனங்கள் ஒருவரொருவரிடம் கடன் வாங்கும், அரசிடம் கடன் வாங்கும் அதே சமயம் வெவ்வேறு நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்தும் அரசின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதுமுண்டு. எவர்கிறாண்ட் நிறுவனம் அதற்கு விதிவிலக்கல்ல. நிறுவனத்தின் கடன் 305 பில்லியன் டொலர் என்று குறிப்பிடப்படுகிறது. தனது அறிக்கையில் தமது கையிருப்பிலிருக்கும் பணப்புழக்கம் பெரும் அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக அந்த நிறுவனம் குறிப்பிடுகிறது.

சர்வதேச நிறுவனங்களின் பொருளாதார நிலைமையைக் கணிப்பிட்டு அவைகளைப் பற்றிய சான்றிதழ்களை வழங்கும் அமைப்புகள் எவர்கிறாண்ட் நிறுவனத்தின் நிலைமை நம்பகரமானது அல்ல என்று ஆகஸ்ட் மாத ஆரம்பத்திலிருந்தே எச்சரித்து வருகின்றன. ஹொங்கொங் பங்குச் சந்தையில் நிறுவனத்தின் பங்குகளை வாங்கச் சர்வதேச நிறுவனங்கள் தயாராக இல்லையென்பதால் அவைகளின் பெறுமதி வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றன.

எவர்கிறாண்ட் நிறுவனத்தின் கடன்களும், முதலீடுகளும் வெவ்வேறு நிறுவனங்கள், வங்கிகள், தனியார் மட்டுமன்றி சீன மத்திய வங்கியுடனும் சங்கிலித்தொடர்பாக இருக்கிறது. எனவே, அந்த நிறுவனம் திவாலாகும் பட்சத்தில் சீனப் பொருளாதார மைதானமே ஒரு பூகம்பத்தைச் சந்திக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது. அதன், தொடர்பாக வேறு நிறுவனங்களின் வர்த்தக நிலைமைகளும் தாக்கப்பட சர்வதேச அளவில் ஒரு பாதிப்பை உண்டாக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *