கானரித் தீவுகளின் எரிமலை 50 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் வெடித்துச் சிதறிக்கொண்டிருக்கிறது.
ஸ்பெயின் நாட்டின் பகுதியான கானரித் தீவுகள் சுற்றுலாக்களுக்குப் பெயர்போன எரிமலைகளாலானவையாகும். எட்டுத் தீவுகள் அடுத்தடுத்திருக்கின்றன. அவைகளில் பெரியதான 85,000 பேர் வசிக்கும் லா பால்மா தீவிலேயே எரிமலை பொங்கியெழுந்திருக்கிறது.
ஞாயிறன்று காலையில் சிறிய பூமியதிர்ச்சி ஒன்றும் அங்கே ஏற்பட்டிருக்கிறது. பெரிய பூகம்பங்கள் தொடரலாம், அதனால் கட்டடங்கள் சேதமடைய வாய்ப்புண்டு என்று புவியியலாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
Cumbre Vieja என்ற அந்த எரிமலை மீண்டும் பொங்கியெழப்போவது கணிக்கப்பட்டுச் சுமார் 40 பேரும், அவர்களின் வீட்டு மிருகங்களும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றன. மேலும் 1,000 பேரை வேறிடங்களுக்கு மாற்றுவதில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்தத் தீவுக்குத் தொடர்ந்தும் விமானச்சேவை நடந்து வருகிறது. ஸ்பெயினின் பிரதமர் உடனடியாகக் கானரி தீவுகளுக்குச் சென்று அழிவுகளைப் பார்வையிடவிருக்கிறார். நியூ யோர்க்கில் நடக்கவிருக்கும் ஐ.நா-வின் பொதுச்சபைக் கூட்டத்துக்குப் போகவிருந்த அவர் தனது பயணத்தை ஒத்திப்போட்டிருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்