ஹிஜாப் அணிந்த “பெண்களின் உடைகளில் பன்முகத்தன்மை” விளம்பரம் சமூகவலைத்தளங்களிலிருந்து நீக்கப்பட்டது.
இஸ்லாமிய முக்காடான ஹிஜாப் அணிந்த பெண்ணின் படத்துடன் The Council of Europe அமைப்பு சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட விளம்பரம் சில நாட்களிலேயே அகற்றப்பட்டிருக்கிறது. ஹிஜாப் அணியும் உரிமை பெண்களுக்கு இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் வடிவமைக்கப்பட்ட அந்த விளம்பரம் பிரான்ஸின் உயர்மட்ட அரசியல்வாதிகளை முகம் சுளிக்கவைத்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
“பன்முகத்தன்மையில் அழகு இருப்பதுபோல, சுதந்திரம் ஹிஜாப்பில்” என்ற வரிகளுடன் ஒரு பெண்ணின் தலையின் ஒரு பாகம் ஹிஜாப் உடனும் மறுபாகம் அந்த முக்காடு இல்லாமலும் அந்த விளம்பரத்தில் காணப்பட்டது. இன்னொரு வரியாக, “உலகில் எல்லோருமே ஒரே மாதிரியான தோற்றத்துடனிருப்பின் உலகம் எவ்வளவு சலிப்பாக இருக்கும்,” என்றிருந்தது.
விளம்பரமானது ஸ்டார்ஸ்போர்க்கிலிருக்கும் மனித உரிமை அமைப்பான The Council of Europe மூலம் பாகுபாடுகளுக்கு எதிர்ப்பு, ஒன்றுசேர்த்தலுக்கு ஆதரவு ஆகியவைகளைக் குறியாகக் கொண்டு வெளியிடப்பட்டது. அந்த அமைப்புக்குப் பொருளாதார உதவிசெய்வதில் ஐரோப்பிய ஒன்றியமும் பங்குபற்றிவருகிறது.
ஐரோப்பாவிலேயே முதல் நாடாகப் பெண்களின் முழு முகத்தையும் மறைக்கும் புர்க்கா என்ற முக்காட்டைத் தடை செய்த நாடான பிரான்ஸின் அரசாங்கப் பேச்சாளர் கபிரியேல் அட்டால் “விளம்பரம் இயல்பான அறிவுக்கு முரண்பாடானது, ஏனெனில் அது ஒரு மத அடையாளத்தை விற்பனைக்குக் கொண்டுவருகிறது,” என்று சாடியிருக்கிறார். சில முஸ்லீம் பெண்கள் பிரான்ஸ் அந்த விளம்பரத்தை எதிர்ப்பதை, “தாம் எந்த உடை அணிவது என்பதைப் பெண்கள் முடிவுசெய்யவேண்டும்,” என்கிறார்கள்.
விளம்பரம் நிறுத்தப்பட்டதற்குக் காரணம் பிரான்ஸ் அரசியல்வாதிகளின் எதிர்ப்பா என்பதைக் குறிப்பிட மறுக்கும் அந்த மனித உரிமைகள் அமைப்பு “நாம் அவ்விளம்பரம் பற்றி அலசி ஆராய்ந்து மீண்டும் எமது செய்தியைப் பிரதிபலிப்போம்,” என்று மட்டும் குறிப்பிட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்