கொஸோவோவின் பிரபலமான அரசியல்வாதியின் இடதுசாரிக் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் வென்றது.
2008 இல் செர்பியாவிலிருந்து சுதந்திரமடைந்த நாடாகிய கொஸோவோவில் இதுவரை நடந்த தேர்தல்களின் பின்னர் எந்த அரசாங்கமும் தனது முழுத் தவணையும் ஆட்சியிலிருந்ததில்லை. ஞாயிறன்று நடந்த தேர்தலில் Vetevendosje என்ற இடதுசாரிக் கட்சி எதிர்பார்த்ததுபோல வெற்றியடைந்திருக்கிறது.
ஏற்கனவே ஆட்சிக்கட்டிலிலிருந்த பிரதான கட்சிகள் இரண்டும் முறையே 17 %, 13% வாக்குகளை எடுக்க அல்பின் குர்ட்டி என்ற மக்களின் அபிமான அரசியல்வாதியின் கட்சி 48 % வாக்குகளைப் பெற்று வென்றிருக்கிறது. ஆனால், அபிமானத்துக்குரிய அல்பின் குர்ட்டி பிரதமராக வர முடியாது என்ற நிலைமை. எதிர்க் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அவர் பாராளுமன்றத்தினுள் கண்ணீர்ப் புகைத் தாக்குதல் நடத்தியதற்காகத் தண்டிக்கப்பட்டவர்.
அல்பின் குர்ட்டி பிரதமராகத் தெரிந்தெடுக்கப்படலாமா என்பதை நாட்டின் அரசியலமைப்புச் சட்ட நீதிமன்றம் தீர்மானிக்கும். இதுவரை ஆட்சியிலிருந்த நாட்டின் பிரதான கட்சிகளெல்லாம் நாட்டைச் சூறையாடி, நிர்வாகத்தை ஒழுங்காக நடத்த முடியாமல் தவறிவிட்டார்களென்று குற்றஞ்சாட்டுகிறார் அல்பின் குர்ட்டி. தனது கட்சியின் ஆட்சியில் நாடு வித்தியாசமான முறையில் முன்னேறும் என்கிறார்.
கொஸோவோவை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் உலகின் பல நாடுகளும் அங்கீகரித்து விட்டாலும் கூட ரஷ்யா, செர்பியா ஆகிய நாடுகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை. இதுவரை ஆட்சியிலிருந்த கட்சிகள் கொஸோவோவுடன் போரில் ஈடுபட்டிருந்த செர்பியாவுடன் நல்லிணக்கம் செய்துகொள்வதை முக்கிய ஒரு குறியாகக் கொண்டிருந்தன. தனது ஆட்சியில் அந்த விடயம் ஐந்தாவது, அல்லது ஆறாவது முக்கிய விடயமாக்கப்படுமென்கிறார் அல்பின் குர்ட்டி.
சாள்ஸ் ஜெ. போமன்