துருக்கிய நாணயத்தின் வீழ்ச்சி தொடர்வதால் மீண்டும் வர்த்தக அமைச்சரை மாற்றினார் எர்டகான்.
பதவிக்கு வந்த காலத்திலிருந்து துருக்கியின் நாணய மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்க ஜனாதிபதி எர்டகான் எடுத்துவரும் முயற்சிகளெல்லாம் விழலுக்கிறைத்த நீராகியே வருகின்றன. 2015 இல் டொலருக்கு சுமார் 2.5 துருக்கிய லிரா என்று இருந்த நாணய மதிப்பு சமீப நாட்களில் டொலருக்கு 14 துருக்கிய லிராவாக வீழ்ச்சியடைந்திருக்கிறது.
ஒரு நாட்டின் மத்திய வங்கி சுதந்திரமாகச் செயற்படவேண்டும் என்பது உட்பட்ட சாதாரண பொருளாதாரக் கோட்பாடுகளை துச்சமாக மதிப்பவர் எர்டகான். எனவே, தனது சொந்தப் பொருளாதாரக் கோட்பாட்டுக் கனவுகளை நிறைவேற்றப் பயன்படாத அதிகாரிகள் எவரையும் மாற்றத் தயங்குவதில்லை.
இதுவரை தனது மருமகன் உட்பட நான்காவது ஒருவரை வர்த்தக அமைச்சராக்கியிருக்கிறார் எர்டகான். 2019 லிருந்து இதுவரை மூன்று மத்திய வங்கி அதிபர்களை மாற்றியிருக்கிறார். நாணய மதிப்பு வீழ்ச்சிக்கான காரணம் வெளிநாட்டுச் சக்திகளே என்று குறிப்பிட்டு வரும் எர்டகான் வட்டிக்கும் எதிரியாகும். பொதுவாக, நாட்டின் பணவீக்கத்தைக் குறைக்க மத்திய வங்கி கடன்களுக்கான வட்டியை உயர்த்துவதுண்டு. எர்டகானோ அந்தக் கோட்பாட்டுக்கு எதிர்.உயர்ந்த வட்டி, பணவீக்கத்தை உண்டாக்கும் என்று குறிப்பிட்டு வருகிறார்.
நவம்பர் 2020 இல் தான் எர்டகான் தனது மருமகனால் துருக்கிய லிராவின் மதிப்பைக் காப்பாற்ற முடியவில்லை என்று லுவ்தி எல்வான் என்பவரை வர்த்தக அமைச்சராக்கினார். அவர் காலத்திலும் எர்டகான் இஷ்டப்படி துருக்கிய நாணய மதிப்பு ஸ்திரமடையாமல் வீழ்ந்து வருவதால் நூருட்டின் நபாத்தி என்பவரை வர்த்தக அமைச்சராக்கியிருக்கிறார்.
துருக்கியின் பொருளாதாரம் வளர்ந்திருப்பதாகச் சமீபத்தில் விபரங்கள் வெளியாகியிருந்தன. ஆனால், நாணய மதிப்பின் பெருவீழ்ச்சியும், பணவீக்கமும் சேர்ந்து மக்களை வாட்டி வருகின்றன. கடந்த மாதங்களில் தொடர்ந்தும் மக்கள் இஸ்தான்புல், அங்காரா நகரங்களில் அரசின் பொருளாதார நடவடிக்கைகளை எதிர்த்துப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்