ஜெர்மனியின் பாதை மாற்றம் : உடனடியாக 100 பில்லியன் செலவில் நாட்டின் பாதுக்காப்புப் பலப்படுத்தப்படும்.
ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளை எதிர்நோக்கி ஜேர்மனி தனது அரசியல் பாதையில் பெரும் மாற்றமொன்றைச் செய்துகொண்டதாகப் பிரதமர் ஒலொவ் ஷுல்ட்ஸ் ஞாயிறன்று தெரிவித்தார்.
“இவ்வருடத்தில் ஜேர்மனியப் பாதுகாப்புக்குப் புதிய ஆயுதங்கள் வாங்குவது, பலப்படுத்துவது போன்றவைக்காக 100 பில்லியன் எவ்ரோக்கள் பிரத்தியேகமாக வழங்கப்படும்ம். வரவிருக்கும் வருடங்களின் நாட்டின் பாதுகாப்புச் செலவானது நாட்டின் மொத்த உற்பத்தியில் இரண்டு விகிதமாக இருக்கும்,” என்று ஷுல்ட்ஸ் அறிவித்தார்.
நாட்டோவின் அங்கத்துவ நாடுகள் தமது நாட்டின் மொத்த உற்பத்தியில் இரண்டு விகிதத்தைப் பாதுகாப்புக்காகச் செலவழிக்க வேண்டும் என்பது அந்த அமைப்பின் வரையறையாகும். அதை இதுவரை முழுசாக அசட்டை செய்த நாடாக இருந்தது ஜெர்மனி. இதுவரை காலமும் வெறுமனே யோசிக்கப்பட்ட விடயங்களான பாதுகாப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்படும். இஸ்ராயேலிலிருந்து பறக்கும் காற்றாடிக் கண்காணிப்பு ஆயுதங்கள், அமெரிக்காவின் F 35 போர் விமானங்கள் ஆகியவை கொள்வனவு செய்யப்படலாம் என்றும் தெரியப்படுத்தப்பட்டது.
இதுவரை காலமும் ரஷ்யாவுடன் நெருங்கிய வர்த்தக உறவு கொண்டிருந்ததால் உக்ரேனுக்கு வெறும் தலைக்கவசங்களை மட்டும் வழங்கிய நாடு ஜெர்மனி. கடந்த வாரம் வரை ரஷ்யாவுடன் எதையும் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று ஒற்றைக்காலில் நின்ற ஜேர்மனியின் நடப்பு ஐரோப்பிய அமெரிக்க நாடுகளால் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. இப்போது அப்பாதையை மாற்றிக்கொண்டு உக்ரேனுக்குப் போர் ஆயுதங்களை வழங்கும் முடிவை ஜெர்மனி அறிவித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்