அமெரிக்காவில் பணவீக்கம் 40 வருடத்தில் மிக அதிகமானதாகியிருக்கிறது.
வெளியிடப்பட்டிருக்கும் அமெரிக்காவின் பண மதிப்பு வீழ்ச்சி நவம்பர் மாதத்துக்கு உரியது. 6.8 விகிதப் பணவீக்கத்தை அமெரிக்கா நவம்பர் மாதத்தில் எட்டியிருப்பதாகப் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. பணவீக்கம் நவம்பர் மாதம்வரை தொடர்ந்து ஆறு மாதங்களாக ஏற்பட்டுவருகிறது. அது 40 வருட காலத்தில் அமெரிக்கா கண்டிராத அளவுக்குப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன என்பதையே அது காட்டுகிறது.
கொரோனாக்கட்டுப்பாடுகளால் உலகளாவிய தயாரிப்புக் குறைச்சல், பொருட்களை போக்குவரத்துச் செய்வதில் ஏற்பட்டிருக்கும் பெரும் மந்த நிலை, மக்களின் கொள்வனவு அதிகரிக்குமளவுக்குச் சந்தையில் பொருட்கள் இல்லாமை ஆகியவை எல்லாமே ஏற்பட்டிருக்கும் பணவீக்கத்துக்குக் காரணம் என்று குறிப்பிடப்படுகிறது. [பணவீக்கம் என்பது குறைந்த அளவு பொருட்களை அதிகளவு பணம் துரத்துவதால் ஏற்படும் பொருளாதார நிலை.]
சகல பொருட்களும் அமெரிக்காவில் விலையேற்றத்தைச் சந்தித்திருக்கின்றன, வீட்டு வாடகை, பயணச்சீட்டுக்கள், எரிபொருட்கள் போன்றவையின் விலையும் 6 விகிதத்தால் அதிகரித்திருக்கின்றன. அதே சமயம் கொரோனாக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் மக்களின் வாழ்வு நிலை சகஜமாகியிருப்பதும் அதனால் தேவைகள் அதிகரித்திருப்பதற்கு ஏற்ப பொருட்கள், சேவைகள் இல்லாததும் விலைகளின் அதிகரிப்புக்குக் காரணமாகும். அதாவது அமெரிக்காவின் பொருளாதாரம் குறுகிய காலத்தில் வளர ஆரம்பித்திருக்கிறது.
நவம்பர் மாதத்தின் புள்ளிவிபரங்கள் ஒமெக்ரோன் திரிபின் விளைவுகளைக் காட்டவில்லை. ஒருவேளை அத்திரிபைக் கட்டுக்குள் கொண்டுவர மீண்டும் முடக்கங்கள், கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டால் அது மேலும் தயாரிப்பு, போக்குவரத்துகளைக் குறைத்துச் சந்தைக்குப் பொருட்கள் வருவதைக் குறைக்குமானால் விலைகள் மேலும் அதிகரிக்கலாம் என்று எச்சரிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்