இந்தியா பாதுகாப்புப் படைத் தலைவர், மனைவியார் உட்பட 14 பேருடன் ஹெலிகொப்டர் நீலகிரி பிராந்தியத்தில் விபத்துக்குள்ளானது.
கோயம்புத்தூருக்கும், சூலூருக்குமிடையே பறந்துகொண்டிருந்த இந்திய இராணுவத்தின் ஹெலிகொப்டர் [Mi-17V5] 14 பேருடன் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இந்திய பாதுகாப்புத் தளபதி பிபின் ரவாத், மனைவி மதுலிகா ரவாத் உட்பட முக்கிய இராணுவத் தளபதிகளும் அதில் பயணித்திருந்தார்கள் என்று தெரியவருகிறது.
இந்திய இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து ஒரு பாதுகாப்பு அமைப்பாக மாற்றும் திட்டத்தை நிறைவேற்றவே பிபின் ரவாத் 2019 இல் இந்திய அரசால் நியமிக்கப்பட்டார். முப்படைகளுக்குள்ளும் சில முக்கிய தளபதிகள் அந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பனிமூட்டம் சூழ்ந்திருந்த பகுதியொன்றில் பறந்துகொண்டிருக்கும்போதே அந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகி எரிந்ததாகச் சாட்சிகள் தெரிவிக்கின்றன. விபத்துக்குள்ளானவர்களில் ஏழு பேர் இறந்ததாகக் கடைசியாக வெளிவந்த செய்திகள் குறிப்பிடுகின்றன. மேலதிக நிலபரம் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்