சா… தீ ..!

ஒரே இனக் கண்ணாடியில்
ஆரியக் கல்கள் எறிந்ததால்
சிதறிய சீழ்கட்டு..!

ஒரே மனித இனத்தில்
விழுந்த குறுக்குவெட்டு..!

சாதி புழுக்களைத் தின்று
சூதக கோழிகள் கிளறுகின்றன
இந்திய மண்ணை..!

முதன்மை நாகரிகத்தின்
முதுகில் விழுந்த கூன்..!
பழமை நாதாரிகளின்
தலையில் ஊறும் பேன்.!

சாதிகளின் கூர்மைகளை
அறமற்ற அரசியல் அரம்
பட்டைத்தீட்டி பட்டாபிஷேகம் செய்கிறது.!

அரம்களின் அரியணை அதிராமலிருக்க
சனாதான பூகம்பத்தால்
சமாதானத்தைப் கெடுக்கிறார்கள்..!

மனுதர்ம அரக்க வண்டு
ஈன்ற அணுகுண்டு.!
அகற்ற முடியா புதர்மண்டு..!

மஞ்சினிலியின் மகப்பேறுகள்.!
மக்கா கூறுகள்..!

கோயில் கருவறை முதல்
யாமனின் வரவேற்பறை வரை
கழுத்தை நீட்டும் காட்டுவிரியான்..!

பாரத பளபளப்பு தேகத்தில் விழுந்த
குஷ்டம்..!
பிறப்பு முதல் இறப்பு வரை
அரித்துக் கொண்டிருக்கும்
துஷ்டன்.!

ஆளுகளிடம்
எந்த ஆளுகள் என்று
அறிந்து கொள்ளவே முனையும்
அறிவின் பிறழ்வுகள்.!

சாதிக்கொரு சுடுகாடு
சாதிக்குள்ளேயே திருமணம்
சாதிக்களிக்கும் சத்துணவு..!

ஆணவ கொலைகளின் சதுக்கங்கள்.! _ புத்தி
சுவனமற்ற கிறுக்கல்கள்..!

மூவர்ணக் கொடியை சாய்த்த
நால்வர்ண புயல்..!

சாதியெனும் சாகா தீ
இந்திய இறையாண்மை காடுகளை
எரித்து குளிர் காய்கின்றன.!

எல்லோரும்
ஆண்ட பரம்பரையென ஆக்ரோசமிடுகிறார்கள் _
அடிமை புதைகுழியில் சிக்கி இருப்பது தெரியாமல்..

வர்க்க வார்ப்புகளால்
தர்க்க கோடாரிகள்
ரத்தம் குடிக்கின்றன..!

அக உறுப்புகளும்
புற உறுப்புகளும் ஒன்றாக இருக்க
பிரிவு வளர்த்த புல்லுருவிகள்..!

அறிவு மருந்தை தெளித்தும்
முளைவிட்ட நச்செடிகள்.!
பளிச்சிடும் புதைகுழிகள்..!
கீச்சிடும் வாதை மொழிகள்..!

சாதிகளின் குளறுபடிகளை
விலங்குகள் படித்திருந்தால்
பரிணாமம் அடைந்து இருக்கும் _
நீச மனிதர்கள் அத்தனையும் படித்திருந்தாலும்
ஆறாம் அறிவை அடகுவைத்து திரியும்
சோம்பை..!

சாதி பழங்களில் இருந்து
சாராயம் வடித்து குடிக்கிறோம் நாம் _
செவ்வாயில் ராக்கெட் விடுகிறான்
செம்மையறிவாளன்..!

சாதி அழுக்குகளை சுமந்து
கீழ்நிலையை இறுகப் பிடிக்கின்றோம்.!
அறிவியல் அழகை சுமந்து
மேலைநாடுகள் அரியணையில் அமர்கின்றன..!

சாதி பொந்துக்குள் இருந்து
தலையை நீட்டும் நச்செலிகள்
ஆகாயத்தில் கோட்டை கட்டியவர்களின்
நட்டுகளை கழற்றிக் கொண்டிருக்கிறார்கள்.!

சாதிக் கிளர்ச்சியில் முதலிடத்தில் இருக்கின்ற நாம் _
விஞ்ஞான வளர்ச்சியில்
இருபத்தியைந்து வருடம் பின்தங்கியிருப்பதை அறிக.!

சாதி ரோசம் _ ரோகமென
விழி..!
மனித நேசம் _ போகமென
தெளி.!

எழுதுவது ; கவிஞர் விஜய் சேசுலா.