தடுப்பு மருந்துக் கட்டாயம் நெருங்க நெருங்க எதிர்ப்பாளர்கள் ஜேர்மனியில் தீவிரவாத நடவடிக்கைகளுக்குத் தயாராகிறார்கள்.
ஜேர்மனியில் பதவியேற்றிருக்கும் கூட்டணி அரசு, தாம் நாட்டில் கொவிட் 19 தடுப்பு மருந்துக்கான கட்டாயத்தைக் கொண்டுவரத் தயார் என்று அறிவித்து, அதை மக்கள் ஆரோக்கிய சேவையிலுள்ளவர்களுக்கு ஏற்கனவே நடைமுறைப்படுத்தவும் ஆரம்பித்திருக்கிறது. அதே சமயம், கட்டாயத்தடுப்பு மருந்து என்பதை முழுப் பலத்துடன் எதிர்க்கும் சிறிய அமைப்புக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகள் கூராகி வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜேர்மனியப் பாராளுமன்றத்தில் வெள்ளியன்று கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்படி நாட்டின் மக்கள் ஆரோக்கிய சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் எல்லோரும் கொவிட் 19 தடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளவேண்டும். அது மார்ச் மாத நடுப்பகுதியில் அமுலுக்கு முழுசாக வரும். அத்துடன் மூன்றாவது தடுப்பூசி ஏற்கனவே நாட்டின் 25 % மக்களுக்குக் கொடுக்கப்பட்டு விட்டது. புதிய தொற்றுக்கள் வேகமாகக் குறைந்து வருகின்றன.
அரசின் அடுத்த கட்ட நடவடிக்கையாக இருக்கப்போகும் நாட்டு மக்களெல்லோரும் தடுப்பு மருந்து எடுக்கவேண்டும் என்பதைக் கடுமையாக விமர்சித்து நாட்டின் வெவ்வேறு பகுதியில் சிறிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. மாநில மக்கள் ஆரோக்கிய அமைச்சரொருவரின் வீடும் குறிவைக்கப்பட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வன்முறைகள் நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்டங்களில் சுமார் 15 பொலீசார் காயமடைந்திருக்கிறார்கள்.
எதிர்ப்பவர்களில் ஒரு குழுவினர் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட வலதுசாரி நிறவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடப்படுகிறது. முக்கிய புள்ளிகளைக் கொல்லவும், தாக்கவும் தயாராக இருக்கும் அவர்கள் மீது ஏற்கனவே ஜேர்மனியில் உளவுத்துறை கண்வைத்திருப்பதாகத் தெரிகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்