இந்தியாவின் மொத்தக்கொள்வனையாளர் விலையேற்றம் 12 வருடத்தின் உச்சத்தைத் தொட்டது.

அமெரிக்கா மட்டுமன்று உலக நாடுகள் பலவற்றிலும் பணவீக்கமும், விலையேற்றமும் நீண்ட காலத்துக்குப் பின்னர் பெரும் உயர்ச்சியைக் கண்டிருக்கின்றன. நவம்பர் மாதத்தில் இந்தியாவின் வியாபாரிகளுக்கான கொள்வனவு விலைகளின் ஏற்றம் அதே மாதம் 2020 உடன் ஒப்பிடும்போது 14.23 % என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முந்தைய வாரத்தில் அது 12.54 % ஆல் அதிகரித்திருந்தது. 

சில்லறை வியாபாரிகளுக்கும், மொத்தவிலைக் கொள்வனவாளர்களுக்கும் இடையேயான பணவீக்கத்தாலான விலையேற்றம் அதிகமாகியிருக்கிறது. விளைவாகப் பல சில்லறை வியாபாரிகள் தங்களுடைய இலாபத்தை இழக்கும் நிலை ஏற்படலாம் என்று பொருளாதார அவதானிகள் கணிக்கிறார்கள். 

இந்தியாவின் மத்திய வங்கியின் 2021 க்கான பணவீக்கக் கணிப்பீடு ஆகக்கூடியது 2 % ஆக இருக்கும்போது மொத்த அளவில் கொள்வனவு செய்பவர்களின் விலைகள் தொடர்ந்து எட்டு மாதங்களாக 10 % க்கும் அதிகமாகவே இருந்து வந்திருக்கிறது. சாதாரண மக்களின் விலையேற்றத்திலான பணவீக்கம் 4.91 % ஆல் நவம்பரில் அதிகரித்திருக்கிறது.

விலையேற்றங்களுக்கு முக்கிய காரணமாக உலகளவில் ஏற்பட்டிருக்கும் எரிசக்தி விலையுயர்வு சுட்டிக் காட்டப்படுகிறது. இந்திய அரசு எரிபொருட்களுக்கான வரியைக் குறைத்திருக்கிறது. சமீபத்தில் சர்வதேச ரீதியில் அவைகளின் விலை ஓரளவு குறைந்திருப்பினும் இந்தியாவுக்குள் ஏற்படும் பொருளாதார வளர்ச்சியால் விலையதிகரிப்பையும், பணவீக்கத்தையும் குறைக்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. 

ஒரு வருடத்துக்குக் முன்னருடன் ஒப்பிடும்போது  2021 இன் மூன்றாவது காலாண்டில் 8.4 % ஆல் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடைந்திருக்கிறது. சர்வதேச ரீதியில் எந்த நாட்டிலும் காணாத அளவுக்கு வளர்ந்துவரும் இந்தியப் பொருளாதாரம் நாட்டின் பணவீக்கத்தை மேலும் அதிகப்படுத்தும் என்கிறார்கள் பொருளாதார அவதானிப்பாளர்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்