உளவு பார்க்க முயல்வதாகக் குற்றஞ்சாட்டி ரஷ்யாவின் இரண்டு ராஜதந்திரிகளை வெளியேற்றியது கொலம்பியா.
கொலம்பியாவில் ராஜதந்திரிகளாகத் தூதுவராலயத்தில் பணியாற்றும் போர்வையில் தனது நாட்டின் இராணுவம், எண்ணெய், தொழில்நுட்பத் துறைகளில் வேவுபார்க்க ஆட்களைப் பிடிக்க வலை வீசியதாகக் குற்றஞ்சாட்டி இரண்டு ரஷ்யர்களை வெளியே அனுப்பியது கொலம்பியா.
தென் அமெரிக்காவில் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடென்று குறிப்பிட முடியாத கொலம்பியா எப்போதும் ரஷ்யாவிடம் நல்லுறவையே கொண்டு வந்திருக்கிறது. கொலம்பியாவில் உளவுபார்ப்பது எப்போதுமே வல்லரசுகளின் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. கொவிட் 19 மருந்தைத் தெரிவு செய்யும்போது கொலம்பியா ரஷ்யாவின் மருந்தையே முக்கியமானதாகத் தெரிவு செய்து 300,000 மருந்துகளைப் பெற்றுமிருக்கிறது. அப்படியிருக்கையில் கொலம்பியாவின் இந்த நடவடிக்கை தாம் வரவிருக்கும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியின் நண்பர்கள் என்று காட்டுவதற்காக இருக்கலாமா என்று சந்தேகப்படவைக்கிறது. கொலம்பியாவின் குற்றச்சாட்டை முழுக்க முழுக்க மறுக்கும் ரஷ்யா பதிலடியாகத் தானும் இரண்டு கொலம்பிய ராஜதந்திரிகளை நாட்டைவிட்டு வெளியேற்றியிருக்கிறது. சாள்ஸ் ஜெ. போமன்