ஐரோப்பிய ஒன்றியம் சீனாவுடன் பரஸ்பர முதலீட்டு ஒப்பந்தம் செய்துகொண்டது.
ஏழு வருடங்களாகத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தைகளின் பின்பு 30.12 புதன் கிழமையன்று தொலைத்தொடர்புச் சந்திப்புகள் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வொன் டெர் லெயொனும் சீன ஜனாதிபதியும் ஷி யின்பிங்கும் ஒரு முதலீட்டு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் முதலீடு செய்யச் சீனாவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களுக்கு ஈடாக சீனாவில் முதலீடுகள் செய்யும் வாய்ப்புக்கள் இல்லாததைச் சுட்டிக்காட்டி நீண்டகாலமாக இப்பேச்சுவார்த்தைகள் நடந்துவந்திருந்தன. இந்த ஒப்பந்தம் சீனா மீது காலநிலை பேணல், தொழிலாளர்களின் சுபீட்சம் போன்ற கட்டுப்பாடுகளை போடுகின்றன. அத்துடன் சீனா தனது நாட்டின் நிறுவனங்களுக்கு அரச மான்யங்களைக் கொடுத்து அதன் மூலம் அந்த நிறுவனத்தின் பொருட்களை வெளிநாடுகளில் குறைந்த விலையில் விற்றுச் சந்தையில் பலம் பெறும் வாய்ப்புக்களையும் குறைக்கின்றன என்று குறிப்பிடப்படுகிறது.
மின்கலத்தால் இயங்கும் வாகனங்கள் தயாரிப்பு, கட்டடத் துறை, கடல் தொழில், விளம்பரம், தொலைத்தொடர்பு சேவைகள், விமான சேவைகள் மற்றும் சுகாதாரத்துக்கான சீனாவின் சந்தையில் நுழைய ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களுக்கான வாய்ப்புக்கள் இந்த ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும். அத்துடன் வியாபார விடயங்களில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்கத் தெளிவான சட்ட வரையறைகளும் உண்டாக்கப்பட்டிருக்கின்றன.
“ஐரோப்பாவும், சீனாவும் உலகின் இரட்டைச் சக்திகள், சந்தைகள், பாரம்பரியங்கள்,” என்று ஷி யின்பிங்கும் “இந்த ஒப்பந்தம் நாம் எமது அடிப்படைக் கோட்பாடுகளைப் பேணவும், சீனாவில் அடிமை வேலைகளை ஒழிக்கவும் உதவும்,” என்று உர்சுலா வொன் டெர் லெயொனும் இவ்வொப்பந்தம் பற்றிக் குறிப்பிட்டார்கள்.
சீனாவால் அவமதிக்கப்படும் பல மனித உரிமைகளைச் சுட்டிக்காட்டி அப்படியான நாடொன்றுடன் மனித உரிமைகளைக் காக்கப் போராடும் ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்வது பற்றி சீன மனித உரிமைக் குழுக்களும், சர்வதேச மனித உரிமை கண்காணிப்புக் குழுக்களும் இவ்வொப்பந்தத்தைக் கடுமையாக விமர்சிக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்