ஜோ பைடன் இதுவரை இஸ்ராயேல் பிரதமரைக் கூப்பிட்டுக் கதைக்கவில்லை.
பதவியேற்றுப் பனிரெண்டு நாட்களாகிய பின்னும் அமெரிக்க ஜனாதிபதி இஸ்ராயேல் பிரதமர் நத்தான்யாஹூவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசவில்லை என்பது இஸ்ராயேலிய அரசியல் வட்டாரங்களில் மட்டுமன்றி உலக அரங்கிலும் கிசுகிசுவாகியிருக்கிறது.
டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற மூன்றாவது நாளே பிரதமர் நத்தான்யாஹுவைக் கூப்பிட்டிருந்தார். அவர்களிருவருடைய நட்பு மத்திய கிழக்கு அரசியலை முழுவதுமாக மாற்றியமைத்ததும், நத்தான்யாஹு ஒரு இஸ்ராயேலியக் குடியிருப்புக்கு டிரம்ப் பெயர் வைத்ததும் அறிந்த விடயங்களே.
தான் பதவியேற்றதிலிருந்து முறையே, கனடா, மெக்ஸிகோ, ஐக்கிய ராசியம், பிரான்ஸ், ஜேர்மனி, நாட்டோ, ரஷ்யா, ஜப்பான் ஆகியவர்களின் தலைவர்களுடன் தொலைத்தொடர்பு கொண்டு பேசிய ஜோ பைடன் இதுவரை நத்தான்யாஹுவைப் புறக்கணித்தே வருகிறார்.
2015 இல் ஈரானோடு அமெரிக்கா உட்பட்ட சர்வதேச நாடுகள் செய்துகொண்ட அணு ஆயுத ஆராய்ச்சி பற்றிய ஒப்பந்தம் சமீப வாரங்களில் உலகின் பேசுபொருளாக ஆகியிருக்கிறது. ஈரானை மீண்டும் அந்த ஒப்பந்தத்துக்கு முன்னரைவிடக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கொண்டுவரவேண்டுமென்பது புதிய அமெரிக்க அரசின் எண்ணமாக இருக்கிறது. முன்னர் ஈரானுடனான ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை நடாத்திய பொப் மல்லேயை மீண்டும் ஈரானுக்கான முக்கிய அமெரிக்கப் பிரதிநிதியாக நியமித்திருப்பது காட்டும் சைகை அதுவே.
ஈரானைத் தொடர்ந்தும் புறக்கணிக்கவேண்டுமென்பது இஸ்ராயேல் மீண்டும் மீண்டும், வலியுறுத்தும் விடயம். ஈரானோ “ஒப்பந்தத்தில் சேர்ந்துகொள்ளப் புதிய கட்டுப்பாடுகளை ஏற்கமாட்டோம்,” என்ற சவடாலுடன் அலைகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் உயர்மட்டத்துடன் பேசவேண்டுமென்ற கட்டாயம் இஸ்ராயேலுக்கு எழுந்திருந்தாலும், வேறு வழியில்லாமல் பொறுத்துக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகியிருக்கிறது.
ஜோ பைடன் வெற்றிபெற்ற 12 மணிக்குள்ளேயே நத்தான்யாஹு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார். ஆனால், அச்சமயம் வேறு தலைவர்களுடன் மட்டுமே பேச முடிந்ததே தவிர ஜோ பைடனுடனல்ல.
ஒபாமாவின் காலத்தில் அமெரிக்கத் தூதுவராக இருந்த மைக்கல் ஒரேன், “ஒரு கட்டத்தில் ஜோ பைடனும், நத்தான்யாஹு கலந்துரையாடுவார்கள், நத்தான்யாஹு அமெரிக்காவுக்கு அழைக்கப்படுவார். ஆனால், இத்தனை காலமாக டெமொகிரடிக் கட்சியினரைப் புறக்கணித்த நத்தான்யாஹு அதற்கான விலையைக் கொடுத்தே ஆகவேண்டும்,” என்று சுட்டிக் காட்டுகிறார்
சாள்ஸ் ஜெ. போமன்