பொத்துவில் முதல் பொலிகண்டி வரை – தடைகள் கடந்து மட்டக்களப்பை எட்டியது..

பொத்துவில்-பொலிகண்டி வரை: முதல் நாள் போராட்டம் தடைகளை கடந்து மட்டக்களப்பை அடைந்துள்ளது..

பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் நடை ஆரம்பிக்கும் போதே தடைகளையும் பிரயோகிக்க ஆரம்பித்திருந்தும் தடைகளையும் மீறி ஆரம்பமான எழுச்சி நடைப் போராட்டம் இன்று மாலை மட்டக்களப்பில் நிறைவடைந்தது.

வடகிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் இணைந்து நடாத்திய இந்த (P2P)பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான போராட்டம் எழுச்சியுடன் இன்று காலை 10 மணிக்கு பொத்துவிலில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.

இந்த போராட்டத்தின்போது, தற்கால கொரோனாக்காலத்தை குறிப்பிட்டு, நீதிமன்ற தடையுத்தரவுகளை வேண்டுமென்றே பெறப்பட்டு, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்,சிவில் சமூக மற்றும் ஊடகவியலாளர்களை போராட்டத்தில் பங்குபெற்ற விடாமல் தடுக்கும் உத்தியை போலிசார் மற்றும் விசேட அதிரடிப்படை கையாண்ட போதும் மக்கள் அதை எதிர்கொண்டு மட்டக்களப்பை எழுச்சி நடையாக வந்தடைந்தனர். பல இடங்களிலும் தடைகளை ஏற்படுத்திய பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் விசேட அதிரடிப்படையினர், ஆர்ப்பாட்ட பேரணியை தடுத்து நிறுத்தி கலைந்து செல்லுமாறும் மக்களுக்கு கூறியபோது, பேரணியில் சென்றவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலையேற்பட்டது.

இதன்போது பேரணியில் சென்றவர்களின் பதாகைகளை கிழித்தெறியப்பட்டது மட்டுமல்லாமல் பேரணியில் சென்றவர்கள் மீது போலிசார் தாக்குதல் நடாத்துவதற்கு முற்பட்ட மற்றும் தாக்குதல் நடத்திய ஒளிப்பதிவு காட்சிகளும் வெளியாகியிருந்தன. அவற்றினையெல்லாம் தாண்டி துணிச்சலுடனும் எழுச்சியுடனும் பேரணி மட்டக்களப்பு நோக்கி சென்றடைந்தது.

பொத்துவிலில் தொடங்கிய பேரணியானது தாண்டியடி, கோமாரி, திருக்கோவில், தம்பிலுவில், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, பாலமுனை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, பாண்டிருப்பு, பெரியகல்லாறு ஆகிய இடங்களினூடாக சென்று களுவாஞ்சிகுடியை அடைந்து அதன் பின்னர் பேரணியாக தாழங்குடாவினை சென்றடைந்தது.அண்ணளவாக 100 கிலோமீட்டர் தூர நடையாக இந்த போராட்டம் மட்டக்களப்பை அடைந்துள்ளது.

தமிழ்பேசும் மக்களின் தாயகமான வடகிழக்கு பிரதேசங்களில் வேண்டுமென்றே பேரினவாத அரசால் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு,மனித உரிமை மீறல்கள், பாரம்பரிய இந்து ஆலயங்களை அழிக்கும் செயற்பாடுகள், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சிங்கள குடியேற்றங்கள், முஸ்லீம் மக்களின் ஜனாசாகளை எரிப்பது, தமிழ் முஸ்லீம் அப்பாவி இளைஞர்கள் மீது ஏவி விடப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்டம், சிறைகளில் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் என பல இன ஒடுக்குமுறைக்கும் இன அநீதிகளுக்கு எதிராகவும் வடகிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தது.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அட்டாளைச்சேனையில் முஸ்லிம்களும் இணைந்து கொண்டனர்.தொடர்ச்சியாக பல முஸ்லிம் மக்களும் பல்வேறு இடங்களிலும் இணைந்து தமிழ் பேசும் மக்களின் எழுச்சிநடை போராட்டம் இது என்பதை நிரூபித்தனர்.

இந்த போராட்டம் நாளை மட்டக்களப்பில் தொடங்கி திருகோணமலையை சென்றடையும் என்றும் தொடர்ச்சியாக யாழ்ப்பாணம் பொலிகண்டியில் அது நிறைவடையவுள்ளதாக சமூக அமைப்புகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *