ஐக்கிய நாடுகள் சபையால் பர்மாவின் இராணுவம் நாட்டைக் கைப்பற்றியது பற்றிக் கண்டிக்க முடியவில்லை.
பொதுத் தேர்தல் மூலம் ஆட்சியை வென்ற மியான்மாரின் தேசிய ஜனநாயகக் கட்சி [NLD] பாராளுமன்றக் கூட்டங்களை ஆரம்பிக்க முன்னரே ஆட்சியைக் கவிழ்த்து தமதாக்கிக்கொண்டது மியான்மார் இராணுவம். அதுபற்றிப் பெரும்பாலான உலக நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தாலும் ஒரே குரலில் ஐ.நா மூலம் அதைச் செய்யமுடியவில்லை.
மியான்மாரின் நிலைமை பற்றிப் பேசுவதற்காகச் செவ்வாயன்று கூட்டிய ஐ.நா-வில் சீனாவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிலைப்பாட்டை உண்டாக்க முடியவில்லை.
பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் சீனாவும், ரஷ்யாவும் மியான்மார் பற்றிய முடிவுகளை எடுக்க மேலும் நேரம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக உறுதிசெய்யப்படாத செய்திகள் கூறுகின்றன. எனவே, அவர்களாலும் ஒரு குரலில் மியான்மார் இராணுவத்தைக் கண்டிக்க முடியவில்லை.
அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் முக்கிய ஆசிய நாடுகள் மியான்மாரின் இராணுவத்தைத் தொடர்புகொள்ளச் செய்த முயற்சிகளும் பலனற்றுப் போனதாகத் தெரியவருகிறது. முதன் முதலாகப் புதனன்று இராணுவத்தின் தலைவர் மின் ஔங் ஹிலியாங் [Min Aung Hlaing] கொடுத்த அறிக்கையில் “நவம்பர் தேர்தலில் நடந்த மிக மோசமான அளவில் ஏமாற்று வேலைகளைப் பற்றி விசாரிக்கும்படி நாம் கேட்டுக்கொண்டும் அரசு அதைச் செய்யவில்லை. அதனால் அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாம் ஆட்சியை ஒரு வருடம் நடத்தவிருக்கிறோம்,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மியான்மாரின் 30 நகரங்களிலிருக்கும் 70 மருத்துவசாலையில் சேவையிலிருப்பவர்கள் இராணுவத்தின் செயலைக் கண்டித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. ஆங்காங்கே சில நகரங்களில் சிறிய அளவில் எதிர்ப்பு ஊர்வலங்களும் நடக்கின்றன. சமூகவலைத்தளங்களில் இராணுவத்துக்கெதிரானவர்கள் ஒன்று சேர்ந்து தமது கருத்துக்களைப் பரிமாற ஆரம்பித்திருக்கிறார்கள். சுமார் 10 வருடங்கள் முன்னர் வரை இராணுவ ஆட்சியிலிருந்த மியான்மாரில் எதிர்ப்புக் குரல்கள் இராணுவத்தின் இரும்புக்கரங்களால் அடக்கப்பட்டதை மக்கள் மறக்கவில்லை.
கொரோனாத் தொற்றுக்கள் இதே சமயத்தில் மியான்மாரில் வெகு வேகமாகப் பரவி வருகின்றன. 140,300 பேர் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாகவும் 3,100 பேர் இறந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்