திகிராய் பிராந்தியத்தில் ஏற்பட்டிருக்கும் உள்நாட்டுப் போர் எதியோப்பியா முழுவதிலும் பரவும் நிலைமை உண்டாகிறது.
எதியோப்பியா அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலகித் தனி நாடாகத் திட்டமிட்டிருந்த திகிராய் மாநிலத்தின் மீது நவம்பர் மாதமளவில் எதியோப்பிய அரசு தனது படையை ஏவிவிட்டது. திகிராயில் ஆட்சியிலிருந்த TPLF கட்சியினரின் இராணுவத்துடன் ஏற்பட்ட போரால் பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாகியிருக்கிறார்கள்.
சுயாட்சி அதிகாரங்கள் கொண்ட எதியோப்பியாவின் 10 மாநிலங்கள் ஒன்று சேர்ந்து மத்திய அரசால் ஆளப்பட்டு வருகின்றன. வெவ்வேறு இன மக்கள் வெவ்வேறு மாநிலங்களில் ஆட்சி நடத்தி வருகிறார்கள். அதைத் தவிரப் பல சிறுபான்மையினரும் எதியோப்பியாவுக்குள் அடக்கம். அவ்வினத்தினரின் எண்ணிக்கை, பலத்துக்கேற்ப அவர்களை அதிகாரத்தில் ஒன்றிணைப்பதே மத்திய அரசின் பலமாகக் கருதப்படுகிறது. சர்வாதிகாரியிடமிருந்து விடுபட்ட நாட்டில் அந்த அதிகார சமநிலையை வெற்றிகரமாகக் கையாண்டு நாட்டை ஓரளவு சுபீட்சத்திற்கு இட்டுச்சென்றவராகக் கருதப்படுபவர் எதியோப்பிய ஜனாதிபதி அபிய் அஹமத்.
அபிய் அஹமதின் அரசியல் தலைமையால் எத்தியோப்பியாவிலேற்பட்ட மாறுதல்களுக்காக அவருக்கு நோபலின் அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது. நீண்டகாலமாகப் பக்கத்து நாடுகளுடன் எதியோப்பியா நடத்திய போர்களுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்திருந்தார். எதியோப்பியாவைப் பொறுத்தவரை நாட்டின் மத்திய அரசிடம் அதிக அதிகாரங்களை ஒன்றுசேர்க்க அவர் எடுத்த நடவடிக்கைகளிலாலேயே திகிராய் மாநிலத்தினருடன் சச்சரவில் இறங்க நேரிட்டது.
தமது மாநிலத்தின் அதிகாரங்களை மத்திய அரசு மட்டுப்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டி அவர்களுடைய கட்டுப்பாட்டை விட்டு விலகப்போவதாக அறிவித்ததாலேயே திகிராய் மீது எத்தியோப்பியாவின் இராணுவம் ஏவிவிடப்பட்டது. போரில் பலர் கொல்லப்பட்டும் பக்கத்து மாநிலங்கள், நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். திகிராய் தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக எத்தியோப்பியாவின் மத்திய அரசு குறிப்பிட்டாலும் அப்பிராந்தியத்தினுள்ளிருந்து விபரங்களெதையும் வெளியே வருவதில்லை. அங்கிருந்து தப்பியோடிய TPLF கட்சியின் தலைவர்கள் தாம் மீண்டும் திகிராயைக் கைப்பற்றுவதாகச் சூழுரைத்து வருகின்றனர்.
இச்சந்தர்ப்பத்தில் கூடிய ஐ.நா-வின் பாதுகாப்புச் சபையில் அங்கிருக்கும் நிலைமை விவாதிக்கப்பட்டிருக்கிறது. மூன்றாவது மாதமாகத் தொடர்ந்து நடந்துவரும் போரால் லட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்திருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. திகிராய் மாநிலத்தினரை எதிரிகளாகக் கருதும் பக்கத்து நாடான எரித்திரியாவின் இராணுவத்தினர் அதற்குள் நுழைந்து போருக்கு முன்னர் எரித்திரியாவிலிருந்து வெளியேறி அங்கே வாழ்ந்துவந்த எரித்திரிய அகதிகளைச் சிறைப்பிடித்துச் சென்றிருப்பதாகவும், திகிராயில் கொள்ளை, கொலை, கற்பழிப்பில் ஈடுபட்டிருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இஸியாஸ் அவெர்க்கி என்ற சர்வாதிகாரியால் ஆளப்பட்டு வரும் எரித்திரியாவுடன் எதியோப்பியாவின் அபிய் அஹமது சேர்ந்து திகிராய் மக்களைத் தாக்கி வருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் உண்டு. வில் நிலைமையை விரைவாக அணுகித் தீர்வுகாண்பது அவசியம், இல்லையேல் எத்தியோப்பியாவுக்குள் மட்டுமன்றி பக்கத்து நாடுகளுடையேயும் போர் வலுக்கலாம் என்று பாதுகாப்புச் சபையில் குறிப்பிடப்பட்டது.
சாள்ஸ் . ஜெ போமன்