இராஜதந்திரிகள் சிலரை வெளியேற்றியது ரஷ்யா.
ரஷ்யாவின் பல பாகங்களிலும் ஜனாதிபதி புத்தினுக்கு எதிராகப் பேரணிகள் நடந்து வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் நவால்நிய் சமீபத்தில் ஜெர்மனியிலிருந்து ரஷ்யா திரும்பியதும் அவை அதிகரித்திருக்கின்றன. அவற்றில் பங்குபற்றுகிறவர்கள் மேற்கு நாடுகளால் உசுப்பேத்தப்பட்டவர்கள் என்று குறிப்பிடும் ரஷ்யா சில வெளிநாட்டு இராஜதந்திரிகளை “விரும்பத்தகாதவர்கள்” என்று நாட்டைவிட்டு வெளியேற்றியிருக்கிறது.
ஜேர்மனி, போலந்து, சுவீடன் நாட்டைச் சேர்ந்த மூன்று இராஜதந்திரிகள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனுமதியற்ற ரஷ்ய அரசுக்கெதிரான ஊர்வலங்களில் பங்குபற்றியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. வெளிநாடுகளில் பணியிலிருக்கும் இராஜதந்திரிகளுக்கு அந்தந்த நாடுகளில் நடக்கும் முக்கியமான விடயங்களைப் பார்வையிடுவதும், கணிப்பதும் கூடக் கடமைகளில் ஒரு பகுதியே என்று வெளியேற்றப்பட்ட இராஜதந்திரிகளின் நாட்டு அரசுகள் குறிப்பிடுகின்றன.
சுவீடன், ஜேர்மனி, போலந்து நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள் ரஷ்யாவின் நடப்பைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள். இப்படியான நகர்வுகள் ரஷ்யாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் ஏற்கனவே இருக்கும் மசக்கசப்புக்களை ஆழமாக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டார்கள்.
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் சமீபத்தில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டபோது அங்கே சில நாட்டு இராஜதந்திரிகள் சமீபமளித்திருந்ததும் ரஷ்யாவின் ஆளுங்கட்சியினரைச் சூடேற்றியிருக்கிறது. அப்படியான நடத்தைகள் மூலம் நீதிமன்றத்தின் மீது குறிப்பிட்ட நாடுகள் அரசியல் அழுத்தம் கொடுக்க முற்படுவதையே காட்டுகிறது என்று அவர்கள் விமர்சிக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்