கடுமையான விமர்சனங்களைத் தாங்கிக்கொண்டு மீண்டும் நிலக்கரிச் சுரங்கமொன்றைத் திறக்க அனுமதித்தது பிரிட்டன்.
முப்பது வருடங்களுக்குப் பிறகு முதல் தடவையாக ஐக்கிய ராச்சிய அரசு ஒரு நிலக்கீழ் நிலக்கரிச் சுரங்கமொன்றைத் திறக்க அனுமதி கொடுத்திருக்கிறது. 2015 ம் ஆண்டில் கெல்லிங்லே கொல்லியரி என்ற இதே போன்ற நிலக்கரிச் சுரங்கம் மூடப்பட்டபின் பிரிட்டனில் ஆழ்சுரங்கங்களெதுவும் நிலக்கரி எடுக்கப் பயன்படுத்தப்படவில்லை.
கரியமிலவாயு வெளியிடலை 2050 இல் முழுவதுமாக நிறுத்தப்போவதாக அறிவித்திருக்கும் அரசு மேற்கு கம்ப்ரியாவில் திறக்கவிருக்கும் புதிய நிலக்கரிச் சுரங்கத்தை 2049 ம் ஆண்டுவரை பாவிக்க அனுமதி கொடுத்திருக்கிறது. குறிப்பிட்ட பிராந்தியத்தில் நீண்ட காலமாக வெவ்வேறு காரணங்களால் உண்டாகியிருக்கும் வேலையில்லாத் திண்டாட்டதை நேரிடவே இந்தச் சுரங்கத்தைத் திறக்க அனுமதித்ததாக அப்பிராந்திய நகரசபை குறிப்பிட்டிருக்கிறது. இந்தச் சுரங்கம் அப்பிராந்தியத்தில் சுமார் 500 பேருக்கு வேலைவாய்ப்புக்களைக் கொடுக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
ஐக்கிய ராச்சியத்தின் நிலக்கரிச் சுரங்கம் திறக்கப்போகும் அறிவிப்பு பிரிட்டனுக்குள்ளிருந்தும், உலகெங்குமிருந்தும் கடுமையான விமர்சனங்களை உண்டாக்கியிருக்கிறது. “ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றங்களைத் தடுத்து நிறுத்தும் திட்டங்களுக்கான COP 26 மாநாட்டை இவ்வருடத்தின் கடைசிப் பகுதியில் கிளாஸ்கோவில் நடாத்தவிருக்கும் ஐக்கிய ராச்சியம் இந்தத் தவறைச் செய்வது தன் முகத்தில் தானே கரி பூசிக்கொள்வது போன்றது,” என்று பிரதமர் ஜோன்சனுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார், ஜிம் ஹான்ஸன் என்ற சர்வதேசக் காலநிலை ஆராய்வாளர். 1990 களிலிருந்து அமெரிக்கா உட்பட பல நாட்டுப் பாராளுமன்றங்களிலும் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் பற்றிப் பேச்சாற்றுபவர் ஜிம் ஹான்ஸன்.
“2016 பாரிஸ் காலநிலை மாநாட்டு ஒப்பந்தப்படி எங்கள் நாட்டின் கரியமிலவாயு வெளியிடலை 1990 ம் ஆண்டில் வெளியிட்டதன் 68 விகிதத்தால் 2030 இல் குறைக்கவிருக்கும் பிரிட்டன் காலநிலை மாற்றங்களைத் தவிர்ப்பதில் போராடும் முக்கிய ஒரு நாடாகும். 2025 இல் நாம் மின்சாரத்துக்காக நிலக்கரி பாவிப்பதை முழுவதுமாக நிறுத்தவிருக்கிறோம். கரியமிலவாயுவை வெளியேற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் பிரிட்டன் அரசு சேர்ந்து செயற்படுவதையும் நிறுத்தும் முடிவை எடுத்திருக்கிறோம்,” என்று ஜிம் ஹான்ஸனுக்குப் பதிலளித்திருக்கிறார் பிரதமர் ஜோன்சன்.
ஆரம்பிக்கப்படவிருக்கும் சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் நிலக்கரி பிரிட்டனின் இரும்புப் பொருட்கள் தயாரிப்பிலும், அத்தயாரிப்பிலிருக்கும் தொழிற்சாலைகளின் மின்சாரத்துக்கும் பாவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்படுகிறது.
அந்த நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் “நாங்கள் இந்தச் சுரங்கத்தைத் திறக்காவிட்டாலும் குறிப்பிட்ட இரும்புத் தயாரிப்புக்காக ஆஸ்ரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்திருப்போம்,” என்கிறார்.
சர்வதேசத்தின் விமர்சனங்கள் தவிர. சுற்றுப்புற சூழல் பேணல் அமைப்புக்கள், பிரிட்டனின் அரசியல் எதிர்க்கட்சிகள் உட்பட ஜோன்சனில் கொன்சர்வேட்டிவ் கட்சிக்குள்ளிருந்தும் பிரிட்டன் காலநிலை மாற்றங்களுக்கான நடத்தைகளுக்கான வெளிநாட்டுக் கௌரவம் கடுமையாகப் பாதிக்கப்படுமென்பதையும் சுட்டிக் காட்டுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இருந்த போரிஸ் ஜோன்சனின் தந்தையார் ஸ்டான்லி ஜோன்சனும் பிரிட்டன் அரசின் இந்தத் தவறைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்