இமாலயப் பிராந்தியத்தில் பனிமலைச்சரிவால் 150 க்கும் மேற்பட்டவர்கள் இறப்பு.
இந்தியாவின் பகுதியிலிருக்கும் இமாலயாவில் உத்தர்காண்டில் தபொவான் பனிமலையிலிருந்து உடைந்த பகுதி அருகே ஓடும் டௌலிகங்கா நதியின் அணைக்கட்டொன்றில் வீழ்ந்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதனருகே இருக்கும் கிராமமான ரேனியிலிருக்கும் கட்டடங்கள் பலவற்றை அது அடித்துச் சென்றிருக்கிறது.
உடைந்து விழுந்த மிகப்பெரும் பனிமலைப் பகுதி நீரினுள் விழுந்ததால் சுனாமி அலைபோன்ற பெரிய அலையொன்று உண்டாகியதாலேயே அது அருகேயிருக்கும் கிராமத்தினூடே வேகமாகக் கடந்திருக்கிறது. அது வழியேயிருக்கும் வீதிகள், பாலங்கள், வீடுகள் அத்தனையையும் தன்னுடன் அள்ளிக்கொண்டு போயிருப்பதாலேயே பெரும் உயிர்ச்சேதம் நிகழ்ந்திருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
பனிமலைச்சரிவு ஏற்பட்டிருந்த இடத்தில் நீர்மட்டம் ஒரு மீற்றருக்கும் அதிகமுயர்ந்திருப்பதாகவும் அது படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் அப்பிராந்திய ஊடகங்களிலிருந்து அறியமுடிகிறது. கீழ் நோக்கிப் பாய்ந்துசெல்லும் அந்த நதியின் பக்கங்களில் வசிப்பவர்களை முடிந்தளவு அதிக தூரத்துக்கு விலகிச் செல்லும்படி அவசரச் செய்தி அனுப்பப்பட்டிருக்கிறது. நீர் வடிந்தபின்னரே இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையும், அழிவின் அளவையும் அறிந்துகொள்ளமுடியுமென்று அப்பகுதிப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
உண்டாகிவரும் காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் உத்தர்கண்ட் பிராந்தியம் சமீபத்தில் பல வெள்ளப்பெருக்குகளையும், அதனால் ஏற்பட்ட அழிவுகளையும் நேரிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சாள்ஸ் ஜெ. போமன்.