ஆஸ்திரியாவில் பிறந்து 10 வருடங்கள் வளர்ந்த மூன்று சிறுமிகளை நாட்டை விட்டு வெளியேற்றியதால் கூட்டணி அரசு பிளக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
ஆர்மீனியா, ஜோர்ஜியா நாடுகளைச் சேர்ந்த 12 வயதைச் சுற்றிய மூன்று சிறுமிகளும் அவர்களுடைய குடும்பங்களும் ஆஸ்திரியாவுக்கு வந்து 10 வருடங்களுக்கும் மேலாகிறது. 2019 இல் ஏழு வருட காலத்துக்கு அவர்களுடைய அகதி விண்ணப்பங்களை விசாரித்தபின்னர் அதை மறுத்துவிட்டது.
ஆஸ்திரியாவிலேயே பிறந்து வளர்ந்த அப்பிள்ளைகளோ அந்த நாட்டுப் பாடசாலைக்குச் சென்று படித்துச் சமூகங்களில் நெருக்கமாகிவிட்டார்கள். எனவே, பாடசாலைச் சினேகிதர்களும் பல நூறு குடும்பங்களும் அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றவேண்டாமென்று குரலெழுப்பி ஊர்வலம் சென்றார்கள். மனிதாபிமான ரீதியிலாவது அக்குடும்பங்களுக்கு ஆஸ்திரேலியாவில் குடியேற அனுமதிக்கலாமா என்று ஆராய்ந்து அதையும் மறுத்துவிட்டது நாட்டின் குடியேற்றத் திணைக்களம்.
இதனால் நாடு முழுவதும் அக்குடும்பத்தினருக்கான ஆதரவு பெருகியது. அரசாங்கத்தில் வலதுசாரிப் பழமைவாதிகளுடன் சேர்ந்திருக்கும் சுற்றுப்புற சூழல் பேணல் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும் அப்பிள்ளைகளை நாட்டைவிட்டு வெளியேற்றலாகாது என்று குரல்கொடுத்தனர். வலதுசாரிப் பழமைவாதக் கட்சி அமைச்சர்கள் நாட்டில் இருக்கும் சட்டங்கள் எவருக்கும் பொதுவானவை என்பதால் அவர்களை வெளியேற்றியே ஆகவேண்டுமென்று குரல்கொடுத்தனர்.
அக்குடும்பங்களை இரவோடிரவாகக் கைதுசெய்து காவலில் வைத்த பொலீஸார் அவர்களை நாட்டைவிட்டும் வெளியேற்றினர். அதையடுத்து நாட்டின் தலைநகரான வியன்னாவில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்பட்டன. ஏற்கனவே கோட்பாடுகளில் தமக்கு அதிகம் ஒற்றுமையில்லாத இரண்டு கட்சிகளும் முட்டி மோதிக்கொண்டிருந்தனர். அக்குடும்பங்களை வெளியேற்றியது பிளவை மேலும் அதிகரித்திருப்பதால், அடுத்த தேர்தல் வரை இந்தக் கூட்டணி தாக்குப் பிடிக்காது என்று பலரும் குறிப்பிடுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்