ஹைத்தியில் ஜனாதிபதியைப் பதவியிலிருந்து கவிழ்க்க முயன்ற குழு கைதுசெய்யப்பட்டிருக்கிறது.
ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி உட்பட 23 பேர் கைத்தியின் ஜனாதிபதியைப் பதவியிலிருந்து கவிழ்க்க முயன்றதற்காகக் கைது செய்யப்பட்டதாக நாட்டின் நீதியமைச்சர் அறிவித்திருக்கிறார். அவர்கள் ஜனாதிபதி ஜொவனல் மொய்ஸெயைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாகத் தெரியவருகிறது.
2020 ஜனவரியில் நாட்டின் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டுப் பிரத்தியேக அதிகாரங்களைக் கையிலெடுத்துக்கொண்டு ஆட்சி நடாத்தி வருகிறார் மொய்ஸெ. இதுவரை தேர்தல்கள் நடத்தப்படவில்லை. அதிகாரத்தைக் கையிலெடுக்க ஜனாதிபதிக்கு அரசியலமைப்புச்சட்டம் இடம் கொடுக்கிறது என்று மொய்ஸெ சொல்லிக்கொண்டாலும் அதை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஜனாதிபதியுடன் இருந்தவர்கள் பலரும் கூட அச்செயலால் அவரிடமிருந்து விலகி எதிர்க்கட்சியுடன் சேர்ந்து நாடெங்கும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
தன்னை ஒரு சர்வாதிகாரியாகச் சித்திரிப்பவர்களை “நான் ஒரு சர்வாதிகாரியல்ல. நான் குறிப்பிட்டது போல பெப்ரவரி 07 2022 இல் நாட்டில் தேர்தல்கள் நடாத்தப்பட்டு அதில் வெற்றி பெறுகிறவர்கள் கையில் ஆட்சி ஒப்படைக்கப்படும்,” என்கிறார் மொய்ஸெ. மொய்ஸெயின் நிலைப்பாட்டுக்கு அமெரிக்காவின் ஜோ பைடன் அரசும் ஆதரவளித்திருப்பதாகத் தெரியவருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்